ராகுல் காந்தி பிரதமராக எந்தப் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும்?- தெலுங்கு தேசம் எம்.பி சர்ச்சைப் பேச்சு

0
0

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்றால் அவருக்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரமாண சமூக பெண் ஒருவரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என சோனியா காந்தியிடம் பரிந்துரைத்ததாக தெலுங்குதேச எம்.பி. திவாகர் ரெட்டி கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் தொகுதி தெலுங்குதேச கட்சி எம்.பி. திவாகர் ரெட்டி. காங்கிரஸ் சார்பில் ஆறு முறை எம்எல்ஏவாக இருந்த அவர் கடந்த 2014-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பு காங்கிரஸில் இருந்து விலகி, தெலுங்கு தேச கட்சியில் இணைந்து, தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார்.

இந்நிலையில் அண்மையில் அமராவதி அருகே நடந்த கூட்டம் ஒன்றில் திவாகர் ரெட்டி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘பாஜகவுக்கு எதிராக நாடுமுழுவதும் எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. பாஜகவின் வெற்றியை தடுக்க கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலுக்கு முன்பே சில யோசனைகளை நான் தெரிவித்தேன். அப்போது நான் காங்கிரஸ் கட்சியில் இருந்தேன்.

அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஒரு ஆலோசனையை கூறினேன். உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் வெற்றியை தடுக்க பிராமணர் சமூக வாக்குகளை காங்கிரஸ் பெற வேண்டும். அதற்கு அம்மாநிலத்தைச் சேர்ந்த பிராமணர் சமூக பெண்ணை ராகுல் காந்திக்கு மணம் முடிக்க வேண்டும். அப்படி செய்தால் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிராமணர்களின் ஆதரவை காங்கிரஸ் பெற முடியும்.

அதன் பிறகு ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று, ராகுல் காந்தி பிரதமராக முடியும் எனக் கூறினேன். ஆனால் அந்த யோசனை சோனியா காந்திஏற்கவில்லை’’ எனக் கூறினார். பொதுக்கூட்டத்தில் பேசியது மட்டுமல்லாமல், இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்திலும் தற்போது பதிவிட்டுள்ளார்.