ரஸல் போராட்டம் வீண்: லிட்டன் தாஸின் ‘காட்டடி பேட்டிங்கில்’ டி20 தொடரை வென்றது வங்கதேசம்

0
0

லிட்டன் தாஸின் ’காட்டடி பேட்டிங்’, முஸ்தபிசுர் ரஹ்மானின் பந்துவீச்சு ஆகியவற்றால் புளோரிடாவில் நடந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 19 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது வங்கதேசம் அணி.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேசம் அணி வென்றது. ஏற்கெனவே ஒருநாள் தொடரை 2-1 என்று கைப்பற்றிய நிலையில், இப்போது டி20 தொரையும் தனதாக்கியுள்ளது.

வங்கதேசத்தின் தொடக்க ஆட்டக்காரர் லிட்டன் தாஸ் 32 ரன்களில் அதிரடியாக 61 ரன்கள் சேர்த்து அணியின் ரன் குவிப்புக்குக் காரணமாக இருந்தார். அதேசமயம், மேற்கிந்தியத் தீவுகள் அணியில் ஒற்றை ஆளாகப் போராடிய ஆன்ட்ரூ ரஸல் 21 பந்துகளில் 47 சேர்த்தும் வீணாகிப்போனது.

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாநிலம், லாடர்ஹில் நகரில் மேற்கிந்தியத் தீவுகள், வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 தொடர் நடந்து வந்தது. 3-வது மற்றும் கடைசிப் போட்டி நேற்று நடந்தது. ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றிருந்ததால், இந்தப் போட்டி பரபரப்பாக இருந்தது.

டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது.

185 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி களமிறங்கிய நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால், டக்வொர்த் விதிப்படி இலக்கு மாற்றப்பட்டு 17.1 ஓவர்களில் 155 ரன்கள் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் மேற்கிந்தியத் தீவுகள் அணி 17.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே சேர்த்து 19 ரன்களில் தோல்வி அடைந்தது.

வங்கதேசம் அணிக்கு லிட்டன் தாஸ், தமிம் இக்பால் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். லிட்டன் தாஸ் தொடக்கத்தில் இருந்தே விளாசலில் ஈடுபட்டு, 24 பந்துகளில் அரை சதம் அடித்தார். 32 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து லிட்டன் தாஸ் ஆட்டமிழந்தார். இவரின் கணக்கில் 3 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கும். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 61 ரன்கள் சேர்த்தனர்.

அதன்பின் வந்த சவுமியா சர்க்கார் (5) முஸ்தபிசுர் ரஹிம் (12), சஹிப் அல் ஹசன் (24) ரன்களில் வெளியேறினார்கள். தமிம் இக்பால் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். மகமதுல்லா 32 ரன்களுடனும், அரிபுல் ஹக் 11 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

20 ஓவர்களில் வங்கதேசம் அணி 5 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்தது. மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் பிராத்வெய்ட், பால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

185 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி களமிறங்கியது. ஆனால், இரு முறை ஆட்டத்தில் மழை குறுக்கிட்டது. இதையடுத்து, டக்வொர்த் விதிப்படி இலக்கு திருத்தப்பட்டு, 17.1 ஓவர்களில் 155 ரன்கள் வெற்றி இலக்காக மேற்கிந்தியத் தீவுகளுக்கு நிர்ணயிக்கப்பட்டது.

சாமுவேல்ஸ் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் வங்கதேச வீரர்கள்

 

மேற்கிந்தியத் தீவுகள் அணி பதற்றத்துடன் விளையாடியதால், தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. 32 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. வால்டன் (19), பிளட்சர் (2) சாமுவேல்ஸ் (6) ஆகியோர் விரைவாக வெளியேறினார்கள்.

4-வது விக்கெட்டுக்கு ரோவன் பாவெல், ராம்தின் ஓரளவுக்கு நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். ஆனால், இருவரும் அடித்து ஆட முற்பட்டு, விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். பாவெல் 23 ரன்களிலும், ராம்தின் 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதனால், 14 ஓவர்களில் 96 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மேற்கிந்தியத் தீவுகள் அணி திணறியது. 3 ஓவர்களில் 59 ரன்கள் வெற்றிக்குத் தேவைப்பட்டது.

ரஸல்

 

6-வதுவிக்கெட்டுக்கு வந்த ரஸல், பிராத்வெயிட் ஜோடி வங்கதேசம் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். அதிலும் ஆன்ட்ரூ ரஸல் 6 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி உள்ளிட்ட 21 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்து அணியை வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார்.

ஆனால், பிராத்வெய்ட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 17.1 ஓவரில் ரஸ்ல் 47 ரன்களில் ஆட்டமிழக்கத் தோல்வி உறுதியானது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி 17.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் மட்டுமே சேர்த்து 19 ரன்களில் தோல்வி அடைந்தது.

வங்கதேசம் தரப்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.