ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சோனியா காந்தி தலைமையில் போராட்டம்

0
0

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போதே இதுதொடர்பாக பிரான்ஸ் அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஒரு போர் விமானத்தின் விலை ரூ.526 கோடி ஆக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் தற்போதைய மத்திய அரசு ஒரு போர் விமானத்தை ரூ.1,670 கோடி விலையில் வாங்குவதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விவரங்களை வெளியிடுமாறு மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. ஆனால் இது ரகசிய ஒப்பந்தம் என்பதால் விவரங்களை வெளியிட முடியாது என்று மத்திய அரசு கூறி வருகிறது.

ரபேல் போர் விமானம் வாங்கு வதில் முறைகேடுகள் நடந்துள்ள தாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார். இது தொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் பேசும்போதும் மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். அதை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடனடியாக மறுத்தார். பிரான்ஸ் அரசும் இந்த ஒப்பந்தம் ரகசிய மானது எனவே விலை விவரங் களை வெளியிட முடியாது என்று அறிக்கை வெளியிட்டது.

இந்நிலையில் ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடை பெற்றிருப்பதாக குற்றம் சாட்டி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தலைமை யில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, அம்பிகா சோனி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, ஆம் ஆத்மி எம்.பி. சுஷில் குப்தா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. சுனில், காகிதத்தால் செய்யப்பட்ட போர் விமானத்தை காண்பித்தார். அவர் பேசியபோது, “ரபேல் போர் விமா னத்தை வடிவமைக்கும் பொறுப்பு முன்அனுபவம் இல்லாத தொழிலதி பரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அவரைவிட நான் நன்றாக விமானத்தை வடிவமைப்பேன். அதற்கு உதாரணமாக காகித போர் விமானத்தை செய்துள்ளேன். அந்த ஒப்பந்தத்தை எனக்கு தாருங்கள்” என்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்களவையில் ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தை காங்கிரஸ் எம்.பி.க்கள் எழுப்பினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அமைச்சர் விஜய் கோயல், அரசு மீதும் பிரதமர் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதை ஏற்க முடியாது என்று தெரிவித்தார். காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு எதிராக பாஜக எம்.பி.க்களும் குரல் எழுப்பிய தால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.