ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜூ மகாலிங்கம் நீக்கப்படவில்லை: சுதாகர் அறிவிப்பு

0
0

 

ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜூ மகாலிங்கத்தை நீக்கி விட்டதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது. இதை யாரும் நம்பவேண்டாம் என்று அம்மன்றத்தின் நிர்வாகி வி.எம்.சுதாகர் தெரிவித்துள்ளார்.

லைக்கா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தவர் ராஜூ மகாலிங்கம். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 2.0 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிப்பதால் ராஜூ மகாலிங்கத்துக்கும் ரஜினிக்கும் இடையே நல்ல நட்பு வளர்ந்தது. நாளடைவில் ரஜினியின் நண்பராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் மாறிய அவர் ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு முன்னதாக தன் பதவியை ராஜினாமா செய்தார். பிறகு ரஜினி மக்கள் மன்ற மாநிலச் செயலாளராக ராஜூ மகாலிங்கம் நியமிக்கப்பட்டார்.

ரஜினி மக்கள் மன்றத்துக்கு மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த ராஜூ மகாலிங்கத்தை மன்றச் செயலாளர் பொறுப்பில் இருந்து ரஜினிகாந்த் நீக்கிவிட்டதாக சமூக வலைதளங்களில் இன்று செய்தி பரவியது. அச்செய்தி தவறானது என்று ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ”சமூக வலைதளங்களில் ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ராஜூ மகாலிங்கத்தை நீக்கிவிட்டதாக செய்தி பரவி வருகிறது. இந்த செய்தி உண்மைக்கு புறம்பானதால் யாரும் நம்ப வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.