‘மோடி அரசின் ஊழல்கள், தோல்விகளை மக்களுக்கு தெரியப்படுத்த பிரச்சாரம்’: காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு

0
0

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஊழல்கள், வங்கி மோசடிகள், ரபேல் போர் விமான ஊழல், நாட்டின் மோசமான பொருளாதார நிலை ஆகியவற்றை மக்களுக்குத் தெரியப்படுத்த ஜன் அந்தோலன் என்ற பெயரில் பிரச்சாரம் செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்மட்டக் குழுவான செயற்குழுக் கூட்டம் இன்று டெல்லியில் அந்தக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் நடந்தது. இதில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத், ஏ.கே. அந்தோனி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அகமது படேல், அசோக் கெலாட் உள்ளிட்ட முக்கிய விஜபிக்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து கட்சியின் மூத்த செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா டெல்லியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஊழல்கள், ரபேல் போர் விமான ஊழல், அசாம் தேசிய குடிமக்கள் வரவைவு பதிவேடு, வங்கி மோசடி, நாட்டின் பொருளாதார நிலை ஆகியவை குறித்து தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம்

 

பிரதமர் மோடி தலைமையில் நடக்கும் இந்த அரசின் அவலங்கள், ஊழல்களை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், ஜன அந்தோலன் அல்லது வெளிப்படை பிரச்சாரம் என்ற பெயரில் மக்களிடம் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக அடுத்து வரும் நாட்களில் மாநிலத் தலைவர்கள், கட்சி நிர்வாகிகளிடம் பேசி முடிவு எடுக்கப்படும்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் அவைக்கு உள்ளேயும், வெளியேயும் ஊழல் குறித்து பேசப்படும். பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் பெற்று மோசடி செய்து ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்றுள்ள மெகுல் சோக்சி குறித்துப் பேசப்படும்.

அவருக்குக் குடியுரிமை வழங்கும்போது, ஆன்டிகுவா அரசு, மெகுல் சோக்சியின் நடத்தைக் குறித்து மத்திய அரசிடம் விசாரணை நடத்தியுள்ளது. அந்த விசாரணையின் போது, மெகுல் சோக்சிக்கு நற்சான்று அளித்துள்ளது மத்திய அரசு. இதன்மூலம் மெகுல் சோக்சி தப்பிச் செல்ல மோடி அரசு உதவியுள்ளது.

இதேபோல ரபேல் போர் விமானக் கொள்முதல் விவகாரத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி விமானத்தின் விலையை ரூ.526 கோடி என நிர்ணயித்திருந்தது. ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு ரபேல் போர்விமானத்தை ரூ.1,676 கோடிக்கு வாங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.48 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

அசாம் தேசிய குடிமக்கள் வரைவு பதிவேடு என்பது காங்கிரஸ் கட்சியின் திட்டமாகும். கடந்த 1985-ம் ஆண்டு ராஜீவ்காந்தி காலத்தில் இது கொண்டுவரப்பட்டது. இதன் நோக்கம் இந்தியர்கள் கணக்கெடுப்பில் விடுபட்டுவிடக்கூடாது, சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டினரைக் கண்டுபிடிப்பதாகும்.

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரை 82 ஆயிரத்து 728 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் சொந்தநாட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. ஆனால், பாஜக அரசில் 4 ஆண்டுகளில் 1,822 வங்கதேசத்தினர் மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இந்தத் தகவல் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டதாகும்.

இந்தத்திட்டத்தின் படி ஒவ்வொரு இந்தியரும் பயன் பெற வேண்டும், வெளிநாட்டினர் கண்டுபிடிக்கப்பட வேண்டும் .

இவ்வாறு ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்தார்.

இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் இன்று கூடியது. நாட்டின் அரசியல் சூழல் குறித்து விவாதித்தோம். மத்தியில் ஆளும் மோடி அரசின் தோல்விகள், ஊழல்கள், இளைஞர்களுக்கு வேலை வழங்காதது ஆகியவற்றை மக்களிடம் வெளிப்படுத்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.