மொழிப்போர் தியாகி அரங்கநாதனின் பேத்திக்கு ஸ்டாலின் உதவி: நீட் தேர்வுக்கு பயிலும் செலவை ஏற்றார்

0
0

திமுக, மொழிப்போர் தியாகி அரங்கநாதனின் பேத்தி நீட் தேர்வு பயில பயிற்சி செலவு முழுவதையும் ஸ்டாலின் ஏற்றுள்ளார்.

இந்தி எதிர்ப்பு போரில் தீவிரமாக ஈடுபட்டு உயிரிழந்த மொழிப்போர் தியாகி அரங்கநாதன் பெயரை பின்நாளில் மாம்பலம் அருகே புதிதாக கட்டப்பட்ட சுரங்கப்பாலத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வைத்தார். தி நகரிலிருந்து மேற்கு சைதாப்பேட்டையை இணைக்கும் இடத்தில் இந்த அரங்கநாதன் பாலம் உள்ளது.

அரங்கநாதனின் பெயர் பெரிதாக பேசப்பட்டாலும் அவரது மகன் சாதாரண ஊழியராக சொற்ப சம்பளத்தில் வாழ்ந்து வருகிறார். அவரது மகளான அரங்கநாதனின் பேத்தி கோமதி சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் தோல்வி அடைந்தார். ஏழையாக இருந்தாலும் நன்றாக படிக்கக்கூடிய கோமதிக்கு மருத்துவராக வேண்டும் என்பது கனவு. அதற்காக மிகவும் முயன்று படித்தார்.

பிளஸ்டூ தேர்வில் 1129 மதிப்பெண் பெற்றார். அரசு பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதினார். ஆனால் முறையான பயிற்சி இல்லாததால் தோல்வி அடைந்தார். இதையடுத்து தனக்கு நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர உதவிடும்படி கோரிக்கை வைத்தார். ஊடகங்களில் அவரைப்பற்றிய செய்தி வெளியானது.

இதையடுத்து அவருக்கு உதவி செய்ய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தீர்மானித்து அவரை அண்ணா அறிவாலயத்திற்கு இன்று அழைத்து அவர் நீட் பயிற்சி பெற தனியார் நிறுவனத்தில் பயிலும் முழுச்செலவுக்கான காசோலையையும் அளித்தார்.

இது குறித்து மு.க.ஸ்டாலின் தனது முகநூலில் செய்துள்ள பதிவு வருமாறு:

“மறைந்த மொழிப்போர் தியாகி அரங்கநாதனின் பேத்தி கோமதி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1129 மதிப்பெண்கள் பெற்றிருந்தும், நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் அவருடைய மருத்துவக் கனவு பறிபோன செய்தியை ஊடகங்களின் மூலம் அறிந்தேன்.

மொழிப்போர் தியாகி அரங்கநாதன் அவர்களின் பேத்தி கோமதியை இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து, அவருடைய உயர்கல்விக்கான மொத்த செலவையும் ஏற்று, அதற்கான காசோலையை வழங்கி அவர் தேர்வுக்கு தயாராவதற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டேன்’’ என ஸ்டாலின் முகநூலில் பதிவு செய்துள்ளார்.

காசோலையை பெற்ற மாணவி கோமதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். அவர் செய்தியாளரிடம் பேசுகையில் ‘‘அரசு பயிற்சி நிலையத்தில் நீட் தேர்வுக்காக பயிற்சி எடுத்தேன், அரசு பயிற்சி நிறுவனத்தில் புத்தகம் கொடுத்தார்கள் அதிலிருந்து ஒரு கேள்வியும் வரவில்லை.

அதனால் தேர்ச்சி அடைய முடியவில்லை. இதனால் தனியார் பயிற்சி மையத்தில் சேர உதவி கேட்டிருந்தேன். இதை கேள்விப்பட்டு தனியார் பயிற்சி மையத்தில் ஓராண்டு பயிற்சி பெறுவதற்கான முழுத்தொகையையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார், அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

நீட் தேர்வில் தேர்ச்சிப்பெற மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிப்பதை விட அதிகம் படிக்க வேண்டும் என்றுத்தான் தோன்றுகிறது. கண்டிப்பாக படித்து அடுத்த ஆண்டு தேர்ச்சி அடைவேன்” என்று தெரிவித்தார்.