மேட்டூர் அணை நிரம்பியதால் 1.30 லட்சம் கனஅடி நீர் திறப்பு

0
0

மேட்டூர் அணையில் இருந்து 13 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகபட்சமாக விநாடிக்கு 1.30 லட்சம் கனஅடி நீர் காவிரியில் நேற்று வெளியேற்றப்பட்டது.

தென்மேற்கு பருவமழை காரணமாக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. அதனால், கடந்த 23-ம் தேதி மேட்டூர் அணை 120 அடியை எட்டியது. அதன் பின்னர் நீர்வரத்து படிப்படியாக குறைந்ததால், மேட்டூர் அணை யின் நீர்மட்டமும் 117 அடியாகக் குறைந்தது.

இந்நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ததால் கபினி, கேஆர்எஸ் அணைகளில் இருந்து அதிகளவு நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப் படி 119.08 அடியாக இருந்த நிலையில், விநாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கு மேல் நீர் வந்தது. இதனால் நேற்று மதியம் 1 மணியளவில் மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-ம் முறையாக 120 அடியை எட்டியது. நேற்று மாலை நீரின் அளவு விநாடிக்கு 1.35 லட்சம் கனஅடியாக அதிகரித்ததால் விநாடிக்கு 1.30 லட்சம் கனஅடி நீர் காவிரியில் திறக்கப்பட்டது.

இதன்மூலம் 13 ஆண்டுகளுக்கு பின்னர் அணையில் இருந்து அதிகபட்சமாக விநாடிக்கு 1.30 லட்சம் கனஅடி நீர் நேற்று வெளியேற்றப்பட்டது. இதில் 16 கண் மதகு வழியாக 1.06 லட்சம் கனஅடி நீரும் சுரங்க மின் நிலையம் வழியாக 24 ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்பட்டது.

இதனிடையே காவிரி நீர் செல்லும் நீலகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், கடலூர், திருவாரூர், நாகப்பட்டினம், ஆகிய மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது உட்பட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும்படி வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் அறிவுறுத்தியுள்ளார்.