மெட்ரோ ரயிலில் ஜூன் மாதத்தில் 13 லட்சம் பேர் பயணம்: மக்கள் வருகையை அதிகரிக்க நடவடிக்கை

0
0

சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களுடன் மெட்ரோ ரயில் சேவை இணைக்கப்பட்டுள்ளதால், கடந்த மாதத்தில் இதைப் பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 13 லட்சத்தை கடந்துள்ளது.

சென்னையில் 2 வழித்தடங்களில் தற்போது 35 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. கடந்த மே மாதம் 25-ம் தேதி சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில்சேவை விரிவாக்கப்பட்டது.

இதனால், மக்கள் சென்ட்ரலில் இருந்து மெட்ரோ ரயில் மூலம் எழும்பூர், கோயம்பேடு வழியாக விமான நிலையத்துக்கு சொகுசாகவும், விரைவாகவும் செல்ல முடியும்.

இதன் காரணமாக தினசரி மெட்ரோ ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கை சராசரி யாக 45 ஆயிரம் முதல் 48 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சென்ட் ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் மக்களின் வரவேற்பு அதிகமாக இருப்பதாகவும், அதேநேரத்தில் எழும்பூரில் எதிர்பார்த்த அளவுக்கு பயணிகளின் வருகை இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதா வது:

சென்ட்ரல், எழும்பூர் பகுதிகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில்சேவை தொடங்கியபோது, முதல் 5 நாட்களுக்கு இலவச பயணத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இதனால், மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கட்டணம் வசூலிக்கும் முறை தொடங்கிய பிறகும் பயணிகளின் வருகை திருப்திகரமாக இருக்கிறது.

ஆனால், எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வருகை சற்று குறைவாக உள்ளது. இதற் கான காரணங்கள் குறித்து ஆய்வு நடத்தி, படிப்படியாக நடவடிக்கை எடுத்து வரு கிறோம்.

கட்டண சலுகை

குழுவாக சென்றால் 20 சத வீதம், வாராந்திர, மாதாந்திர அட்டை வாங்கினால் 20 சத வீதம், பயண அட்டை வாங்கினால் 10 சதவீதம் என தற்போதுள்ள கட்டண சலுகை பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயில் நிலையத்துக்கு மக்கள் எளி தில் செல்ல இணைப்பு வசதியை மேம்படுத்தவுள்ளோம். எழும்பூர் ரயில் நிலைய மின்சார ரயில்கள் வந்து செல்லும் நடைமேடையை இரட்டை நடைமேடையாக மாற்றவும் தெற்கு ரயில்வேயுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்.

சிறிய பேருந்து சேவை

இதுதவிர, பல்வேறு குடி யிருப்பு பகுதிகளில் இருந்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வந்து பயணம் செய்யும் வகையில் கட்டணம் இல்லா வாடகை சைக்கிள் பயணத்திட்டத்தை மேலும் சில இடங்களுக்கு விரிவுபடுத்தவுள்ளோம்.

குறைந்த கட்டணத்தில் வேன் இயக்குதல், மாநகர போக்குவரத்து கழகத்தின் மூலம் சிறிய பேருந்து சேவையை அதிகரித்தல், தேவையான இடங்களுக்கு புதிய பேருந்து நிறுத்த வசதி ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.