மூதாட்டியின் சிறுநீர்ப்பையிலிருந்த 47 கற்களை அகற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவமனை சாதனை

0
0

 

ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனை 65 வயது மூதாட்டியின் சிறுநீர்ப்பையிலிருந்த 47 கற்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி சாதனை படைத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட விளங்களத்தூர் கிராமத்தைச் சார்ந்த இருளன் என்பவர் மனைவி உடையாள் (65). இவரது சிறுநீர்ப்பையில் கற்கள் அதிகமாக இருந்ததை ஸ்கேன் மூலம் பரிசோதித்ததில் தெரிய வந்தது. இதனையடுத்து ராமநாதபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் க.அறிவழகன், நிலைய மருத்துவ அலுவலர் ஞானக்குமார் ஆகியோர் அறுவை சிகிச்சை செய்து அகற்றியிருப்பதாக மருத்துவமனையின் கண்காணிப்பாளர் பி.கே.ஜவஹர்லால் தெரிவித்தார்.

சிறுநீர்ப்பையிலிருந்து அகற்றப்பட்ட கற்கள்.

 

இது குறித்து மூதாட்டி உடையாள் கூறுகையில், ”கடந்த 5 ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தேன். அரசு தலைமை மருத்துவர்களை நாடி அவர்கள் ஸ்கேன் மூலம் பரிசோதித்துப் பார்த்து முதல்வர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் செலவே இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து அகற்றினார்கள். தற்போது பூரணமாகக் குணமடைந்துள்ளேன்” என்றார்.

இது தொடர்பாக அரசு சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர் க.அறிவழகன் கூறுகையில், ”மூதாட்டி உடையாளுக்கு நரம்புத் தளர்ச்சி இருந்ததுடன் சிறுநீர்ப்பையில் கற்களும் சேர்ந்து மிகுந்த அவதிப்பட்டு வந்தார். ஸ்கேன் மூலம் பரிசோதித்ததில் அறுவை சிகிச்சை செய்வது என முடிவு செய்தோம். சிறுநீர்ப்பையில் மொத்தம் 47 கற்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை அறுவை சிகிச்சை மூலம் வெளியில் எடுத்தோம். பொதுவாக முதியோர்கள் அதிகமாக தண்ணீர் குடித்தால் சிறுநீர்ப்பையில் கற்கள் அதிகம் தங்காது. உணவில் உப்பு மிகுந்த பொருட்களான கருவாடு, அப்பளம், வடகம், ஊறுகாய் போன்றவற்றை முதியோர்கள் தவிர்த்து விடுவது நல்லது. முக்கியமாக பள்ளி மாணவ, மாணவியர்கள் சிறுநீரை அடக்கி வைக்காமல் உடனுக்குடன் வெளியேற்றி விட வேண்டும்” எனத் தெரிவித்தார்.