‘மூடர் கூடம்’ நவீன் இயக்கியுள்ள அடுத்த படத்தின் தலைப்பு ‘அலாவுதீனின் அற்புத கேமரா’

0
0

‘மூடர் கூடம்’ படத்தைத் தொடர்ந்து நவீன் இயக்கியுள்ள அடுத்த படத்துக்கு ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சிம்புதேவனிடம் உதவி இயக்குநராகவும், இயக்குநர் பாண்டிராஜிடம் அசோஸியேட்டாகவும் பணியாற்றியவர் நவீன். ‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப் படத்தில் பிரதான வேடத்தில் நடித்ததோடு, படத்தைத் தயாரிக்கவும் செய்தார். 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான இந்தப் படத்தை, பாண்டிராஜ் தன்னுடைய பசங்க புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் வெளியிட்டார்.

நவீனுடன் சேர்ந்து சென்றாயன், ராஜாஜி, ஓவியா, குபேரன், ஜெயப்பிரகாஷ், அனுபமா குமார், சிந்து ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். டோனி சான் ஒளிப்பதிவு செய்த இந்தப் படத்துக்கு, நடராஜன் சங்கரன் இசையமைத்தார். மியூஸிக்கல் பிளாக் காமெடிப் படமாக வெளியான இது, பெரும்பாலானவர்களிடம் வரவேற்பைப் பெற்றது.

குறிப்பாக, இந்தப் படத்தில் இடம்பெற்ற வசனங்கள் தனித்த கவனத்தைப் பெற்றன. ‘தமிழ் தெரியாத இங்கிலீஷ்காரன் கிட்ட இங்கிலீஷ்ல பேசத் தெரிஞ்ச உனக்கு, இங்கிலீஷ் தெரியாத பச்சத் தமிழன்கிட்ட தமிழ்ல பேசணும்னு ஏன்டா தெரியாம போச்சு?’, ‘ஒருத்தர்கிட்ட இருந்து எடுக்குறது மட்டும் திருட்டு இல்ல, ஒருத்தர எடுக்க விடாம பண்றதும் திருட்டு தான்’, ‘நம்மள மாதிரி ஆளுங்களுக்கு வாழ்றதே பெரிய விஷயமா இருக்கும்போது, சாவு அதைவிட பெரிய விஷயம் இல்லை சென்றாயன்’ போன்ற வசனங்கள் தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

 

‘மூடர் கூடம்’ படத்துக்குப் பிறகு ‘கொளஞ்சி’ என்ற படத்தைத் தயாரித்தார். தனராம் சரவணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சமுத்திரக்கனி – சங்கவி இருவரும் பிரதான வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் தயாராகி பல நாட்கள் ஆனாலும், இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில், அடுத்த படத்தை இயக்கி, நடித்துள்ளார் நவீன். இந்தப் படத்துக்கு ‘அலாவுதீனின் அற்புத கேமரா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில், நவீன் ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். முழுவதும் வெளிநாட்டில் படமான இந்தப் படத்தில், பிக் பாக்கெட் அடிப்பவராக நடித்துள்ளார் ஆனந்தி. கே.ஏ.பாட்ஷா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, நடராஜன் சங்கரன் இசையமைக்க, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார்.

இந்தப் படத்துக்குப் பிறகு, விஜய் ஆண்டனியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் நவீன். ஆக்‌ஷன் த்ரில்லரான இந்தப் படத்தை, அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கிறார்.