முழு கொள்ளளவை நெருங்கும் கர்நாடக அணைகள்: தமிழகத்துக்கு 60 ஆயிரம் கன அடி நீர் திறப்பு

0
0

கர்நாடகாவில் தொடரும் கனமழையின் காரணமாக காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை நெருங்கியுள்ளன.

கர்நாடக மாநில‌த்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையால் காவிரி ஆற்றின் குறுக்கேயுள்ள ஹாரங்கி, ஹேமாவதி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்தது. கபினி ஆறு உற்பத்தியாகும் கேரள மாநிலம் வயநாடு மலைப்பகுதிகளில் தொடரும் மழையால் மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிற‌து.

நேற்றைய நிலவரப்படி, கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர் மட்டம் 120.20 அடியாக உயர்ந்திருக்கிறது. இன்னும் இரு தினங்களில் கிருஷ்ணராஜசாகர் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஹாரங்கி அணையின் நீர்மட்டம் 2,857.12 அடியாக உயர்ந்திருக்கிறது. ஹேமாவதி அணையின் நீர்மட்டம் 2,917.41 அடியாக அதிகரித்துள்ளது. கபினி அணையின் நீர்மட்டம் 2,281.82 அடியாக அதிகரித்துள்ளது.

இந்த 4 அணைகளில் இருந்து மைசூரு, மண்டியா மாவட்ட விவசாயிகளுக்கு போக, வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி நீர் காவிரியில் தமிழகத்துக்கு திறந்து

விடப்பட்டுள்ளது. நிகழாண்டில் அதிகளவில் தமிழகத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் சிறப்பு பூஜை கடந்த ஆண்டு கிருஷ்ணராஜ சாகர் அணையில் இதே நாளில் 78.65 அடி மட்டுமே நீர் இருந்தது.

ஆனால் இந்த ஆண்டு கனமழை பெய்ததால் 120 அடியை எட்டியுள்ளது. 11 ஆண்டுகளுக்கு பிறகு கிருஷ்ணராஜசாகர் அணை 120 அடியை கடந்துள்ளது. இதே போல கபினி அணைக்கும் 10 ஆண்டுகளுக்கு பிறகு வினாடிக்கு சுமார் 50 ஆயிரம் கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது.

இத‌னால் முதல்வர் குமாரசாமி 20-ம் தேதி மைசூரு வந்து கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் சிறப்பு பூஜை செய்ய திட்டமிட்டுள்ளார்.  ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளிலும் பூஜை செய்த பிறகு, பாசனத்துக்கு நீர் திறந்துவிடப்படும் என காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.