முத்தரப்பு டி20 தொடர்: ஜமன் அதிரடியில் பாகிஸ்தான் சாம்பியன்: ஆஸி.க்கு அடிமேல் அடி

0
0

ஜமன், சோயிப் மாலிக் கூட்டணியின் பொறுப்பான ஆட்டத்தால், ஹராரேயில் நடந்த முத்தரப்பு டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பாகிஸ்தான் அணி கைப்பற்றியது.

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பக்கர் ஜமன் நிலைத்து ஆடி 46 பந்துகளில் 91 ரன்கள் சேர்த்து அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணமாக அமைந்தார். இதில் 3 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகள் அடங்கும். ஆட்டநாயகன் விருதும், தொடர் நாயகன் விருதும் ஜமனுக்கு வழங்கப்பட்டது.

இவருக்கு உறுதுணையாக சோயிப் மாலிக் பேட் செய்து 43 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்மூலம் பாகிஸ்தான் அணி டி20 தொடரில் தனது முதலிடத்தைக் தக்கவைத்துக் கொண்டது.

அதுமட்டுமல்லாமல் கடந்த 2 ஆண்டுகளாகவே பாகிஸ்தான் அணியினர் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். கடைசியாக விளையாடிய 22 போட்டிகளில் 4 ஆட்டங்களில் மட்டுமே பாகிஸ்தான் அணி தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2006 முதல் 2009-ம் ஆண்டு வரையிலான டி20 போட்டிகளைக் கவனித்தால், 27 போட்டிகளில் 21 போட்டிகளில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தது. ஆனால், 2010,ஜனவரி முதல் 2016-ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணி டி20 போட்டிகளில் மிகவும் மோசமாகவே விளையாடியது.

தரவரிசையில் 9-ம் இடத்தில்தான் இருக்க முடிந்தது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் அந்த அணியில் பல்வேறு இளம் வீரர்களுக்கு அளிக்கப்பட்ட வாய்ப்புகளால் அந்த அணி அதிகமாக வெற்றிகளைப் பெற்று வருகிறது. குறிப்பாக இளம் வீரர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு, பவர் ப்ளேயில் அதிகமான ரன்கள் சேர்க்கும் வலுவான பேட்ஸ்மேன்கள், நடுவரிசையில் நம்பகத்தன்மை வாய்ந்த வீரர்கள் இருப்பது போன்றவை அந்த அணியைத் தரவரிசையில் முதலிடத்துக்குத் தூக்கி நிறுத்தும் அளவுக்குக் கடந்த 2 ஆண்டுகளாகச் செயல்பட வைத்தது.

அந்த செயல்பாடுதான் முத்தரப்பு டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்ற உதவியுள்ளது.

அதிரடியாக ஆடி பாகிஸ்தானுக்கு வெற்றி சேர்த்த தொடக்க ஆட்டக்காரர் பக்கர் ஜமன் பந்தை பவுண்டரிக்குவிரட்டிய காட்சி

 

இந்த போட்டியில் தொடக்கத்திலே மேக்ஸ்வெல் ஓவரில் அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் வீழ்ந்து பாகிஸ்தான் அணி தடுமாறியது, 47 ரன்களுக்கு 3-வது விக்கெட்டையும் இழந்தது. ஆனால், பக்கர் ஜமன், சோயிப் மாலிக் கூட்டணி 100 ரன்களுக்கு மேல் சேர்த்து வெற்றியை உறுதி செய்தனர்.

அதேசமயம், இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரில் வொயிட் வாஷ் ஆகிய ஆஸ்திரேலிய அசிங்கப்பட்டு வெளியேறியது. முத்தரப்பு தொடரிலும் ஓரளவுக்கு சிறப்பாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இங்கும் பலத்த அடிவாங்கி தோல்வியுடன் வெளியேறுகிறது.

பந்தைசேதப்படுத்திய விவகாரத்தில் தடைவிதிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இடத்தை நிரப்ப இன்னும் வலுவான பேட்ஸ்மேன்கள் யாரும் ஆஸ்திரேலியாவுக்குக் கிடைக்கவில்லை என்பதையே இந்தத் தொடர்தோல்விகள் அந்த அணிக்கு காட்டுகிறது.

ஹராரேயில் இன்று நடந்த இறுதி ஆட்டத்தில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் சேர்த்தது.

184 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியையைப் பொருத்தவரை தொடக்க ஆட்டக்காரர்கள் டிஎம் ஷார்ட்(76), ஆரோன் பின்ஞ்(47) ஆகியோர் மட்டுமே நிலைத்து பேட் செய்தனர். முதல்விக்கெட்டுக்கு 95 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். ஆனால், அதன்பின் களமிறங்கிய நடுவரிசை வீரர்கள், கடைநிலை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலிய வீரர் ஷார்ட்

 

குறிப்பாக மேக்ஸ்வெல்(5), ஸ்டோய்னிஸ்(12) ஹெட்(19), கேரே(2), அகர்(2) ஆகியோர் விரைவாக வெளியேறினார்கள். பாகிஸ்தான் தரப்பில் முகமது அமிர் 3விக்கெட்டுகளையும், சாதப் கான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

184 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. மேக்ஸ்வெல் வீசிய முதல் ஓவரில் பர்ஹான், தலத் டக்அவுட்டில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். 3-வது விக்கெட்டுக்கு ஜமனுடன், சர்பிராஸ் அகமது இணைந்தார். இருவரும் ஓரளவுக்கு பேட்செய்து 45 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அகமது 28 ரன்களில் வெளியேறினர்.

4-வது விக்கெட்டுக்கு ஜமனுடன், சோயிப் மாலிக் இணைந்தார். இருவரும் நிதானமாக பேட்செய்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர். இந்த ஜோடியைப் பிரித்த ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் பல பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தியும் முயற்சி பலிக்கவில்லை.

அதிரடியா ஆடிய ஜமன் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்த 16 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ஜமன் 91 ரன்களில் ரிச்சர்ட்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு ஜமன், மாலிக்கூட்டணி 103 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்துவந்த ஆசிப் அலி, சோயிப் மாலிக்குடன் இணைந்து இருவரும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். ஆசிப் அலி 17 ரன்களுடனும், மாலிக் 43 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 19.2 ஓவர்களில் 187 ரன்கள் சேர்த்து 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியத் தரப்பில் மேக்ஸ்வெல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.