முதல் முறையாக இறுதிப் போட்டி கனவில் குரோஷியா: இங்கிலாந்து அணியுடன் மாஸ்கோவில் இன்று பலப்பரீட்சை

0
0

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – குரோஷியா அணிகள் இன்று மோதுகின்றன. நள்ளிரவு 11.30 மணிக்கு மாஸ்கோவில் உள்ள லுஸ்னிக்கி மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தை சோனி டென் 1, சோனி டென் 3 சானல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

குரோஷியா அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் களமிறங்குகிறது. அந்த அணி அதிகபட்சமாக 1998-ம் ஆண்டு பிரான்ஸில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அரை இறுதி வரை முன்னேறியிருந்தது. அந்த ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியிடம் தோல்விகண்டது. இதைத் தொடர்ந்து 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதன் பின்னர் பங்கேற்ற 4 உலகக் கோப்பை தொடர்களிலும் குரோஷிய அணி முதல் சுற்றுடன் வெளியேறியிருந்த நிலையில் தற்போது ரஷ்ய உலகக் கோப்பையில் அபார திறனை வெளிப்படுத்தி வருகிறது.

லீக் சுற்றின் முதல் இரு ஆட்டங்களில் 2-0 என்ற கோல் கணக்கில் நைஜீரியாவையும், அர்ஜென்டினாவை 3-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்திய குரோஷியா நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் கடைசி லீக் ஆட்டத்தில் 9 வீரர்களை மாற்றியது. எனினும் ஐஸ்லாந்து அணிக்கு எதிரான அந்த ஆட்டத்தில் குரோஷியா 2-1 என வெற்றி பெற்று அசத்தியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற நாக் அவுட் மற்றும் கால் இறுதி ஆட்டத்தில் குரோஷியா அணி, பெனால்டி ஷூட் அவுட்டில் முறையே டென்மார்க், ரஷ்யா அணிகளை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது.

குரோஷியா அணியின் பயிற்சியாளர் ஸலாட்கோ டலிக் கூறுகையில், “கடந்த 6 நாட்களில் நாங்கள் அதிக ஆற்றலை செலவிட்டு விட்டோம். இரு ஆட்டங்களுக்காக மட்டும் 240 நிமிடங்கள் செலவழித்துள்ளோம். இது நிச்சயமாக ஒரு பிரச்சினையாக இருக்கும். எனினும் மீண்டு வருவதற்கான எல்லாவற்றையும் செய்வோம் மற்றும் இங்கிலாந்து அணியுடன் மோதுவதற்கான ஆற்றலை கண்டுபிடிப்போம் என்று நம்புகிறேன்” என்றார்.

குரோஷியா அணியின் ஸ்டிரைக்கரான மரியோ மன்ட்ஸூகிக் கூறுகையில், இந்த தருணத்துக்காகத்தான் பல ஆண்டுகளாக நாங்கள் காத்திருந்தோம். அது தற்போது மிக அருகில் உள்ளது. இலக்கை அடைவதற்காக எங்களது கடைசி சொட்டு வியர்வை களத்தில் சிந்தும் வரை போராடுவோம்” என்றார்.

1966-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணி 2-வது முறையாக இறுதிப் போட்டியில் கால் பதிக்கும் கனவுடன் உள்ளது. அந்த அணி கடைசியாக 1990-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் அரை இறுதி வரை முன்னேற்றம் கண்டிருந்தது. அந்தத் தொடரில் அரை இறுதியில் ஜெர்மனியிடம் தோல்விகண்ட நிலையில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இத்தாலியிடம் வீழ்ந்திருந்தது இங்கிலாந்து அணி. இதன் பின்னர் 1994-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெறாத நிலையில் அதைத் தொடர்ந்து நடைபெற்ற 5 உலகக் கோப்பை தொடர்களிலும் இங்கிலாந்து அரை இறுதியை எட்டியது இல்லை. 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றுடன் மூட்டை கட்டிய இங்கிலாந்து இம்முறை ரஷ்ய உலகக் கோப்பையில் இளம் வீரர்களை உள்ளடக்கிய அணியை கொண்டு சிறந்த திறனை வெளிப்படுத்தி வருகிறது.

குரோஷியா அணியின் நடுகளம் லூக்கா மோட்ரிக், இவான் ராகிடிக் ஆகியோரை உள்ளடக்கிய நிலையில் வலுவாக உள்ளது. மேலும் சென்டர் பேக்கில் டீஜன் லோவன், வரசால்கோ ஆகியோரும் முன்களத்தில் மரியோ மன்ட்ஸூகிக்கும் ஸ்டிரைக்கர்களாக பெரிஸிக், ரெபிக், கிரமாரிக் ஆகியோரும் பலம் சேர்ப்பவராக உள்ளனர். ராகிடிக் கூறுகையில், “நடுகளத்தில் நாங்கள் வலுவாக இருக்கிறோம். களத்தில் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம். ஒரு இதயம், ஒரு ஆத்மா போன்றதுதான் இது” என்றார்.

லீக் சுற்றில் துனீசியாவை 2-1 என்ற கோல் கணக்கிலும், பனாமாவை 6-1 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இங்கிலாந்து அணி உறுதி செய்தது. இதனால் பெல்ஜியம் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சில முன்னணி வீரர்களுக்கு பயிற்சியாளர் கரேத் சவுத்கேட் ஓய்வு வழங்கினார். இதன் விளைவு அந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 0-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைய நேரிட்டது. இதைத் தொடர்ந்து நாக் அவுட் சுற்றில் கொலம்பியாவை பெனால்டி ஷூட் அவுட்லும், கால் இறுதியில் சுவீடனை 2-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது இங்கிலாந்து அணி.

அந்த அணியின் கேப்டன் ஹாரி கேன், இந்தத் தொடரில் 6 கோல்கள் அடித்து அதிக கோல்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவருக்கு எதிராக ஏதேனும் சிறப்பு திட்டத்தை குரோஷியா அணி செயல்படுத்தக்கூடும். அந்த அணியின் பயிற்சியாளர் ஸலாட்கோ டலிக் கூறும்போது, “ஹாரி கேனை மதிக்கிறோம். இந்தத் தொடரில் அவர் 6 கோல்கள் அடித்துள்ளார். ஆனால் அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி, டென்மார்க்கின் கிறிஸ்டியன் எரிக்சன் ஆகியோரை செயல்படவிடாமல் நாங்கள் தடுத்தோம். இதேபோல் ஹாரி கேனையும் தடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்.

ஹாரி கேனுடன் முன்களத்தில் ஸ்டெர்லிங் நம்பிக்கை அளிக்கக்கூடிய வீரராக உள்ளார். டெலி அலி, டிரிப்பியர், ஆஷ்லே யங், மெகுயர், வால்கர், ஸ்டோன்ஸ், ஹென்டர்சன், லிங்கார்டு ஆகியோரும் அணிக்கு பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். இங்கிலாந்து அணி இந்தத் தொடரில் 11 கோல்கள் அடித்துள்ளது. இதில் 8 கோல்கள் செட் பீசஸ் சூழ்நிலையில் அடிக்கப்பட்டதுதான். மேலும் குரோஷியாவுக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் கூடுதல் நேரத்தின் போது கடைசி கட்டத்தில் ரஷ்ய அணி செட் பீசஸ் சூழ்நிலையில்தான் கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குரோஷியா வீரர் மோட்ரிக் கூறுகையில், “இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டம் கடினமாகவும், நெருக்கமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். சுவீடன் அணிக்கு எதிராக இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதை நாங்கள் பார்த்தோம். மேலும் கடைசி கட்டத்தில் அவர்கள், பந்தை கையாண்ட விதத்தையும் பார்வையிட்டோம். ‘செட் பீசஸ்’ சூழ்நிலையின் போது டிபன்ஸில் நாங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் ரஷ்யா அணிக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் செட் பீசஸ் மூலம்தான் கோல் வாங்கினோம். இதனால் இந்த பகுதியில் நாங்கள் முன்னேற்றம் காணவேண்டும்” என்றார்.

இரு அணிகளும் இதுவரை 7 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இங்கிலாந்து அணி 4 ஆட்டங்களிலும், குரோஷியா 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. கடைசியாக இரு அணிகளும் 2009-ம் ஆண்டு தகுதி சுற்று ஆட்டத்தில் மோதின. இதில் இங்கிலாந்து 5-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வென்றிருந்தது.

அது என்ன செட் பீசஸ்?

கால்பந்தில் ‘செட் பீசஸ்’ சூழ்நிலையில் அடிக்கப்பட்ட கோல் என்ற வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படும். இதற்கு என்ன அர்த்தம் என்றால் ஸ்டாப்பேஜ் நேரத்துக்குப் பிறகு முக்கியமாக மைதானத்தின் முன்களத்தில் விளையாடப்பட்டு கோல் அடிக்கப்படுவதாகும். அதாவது ஃப்ரீகிக், கார்னரில் இருந்து அடிக்கப்படும் ஷாட்களை முன்கள பகுதியில் இருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கோல் அடிப்பதுதான். இதற்காக சில வீரர்கள் பிரேத்யேக முறையில் தயாராவதும் உண்டு. பெரும்பாலான கோல்கள் இந்த முறையிலேயே அதிகம் அடிக்கப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் டிபன்டர்களின் திறனும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.