முதல் பார்வை: தமிழ்ப்படம் 2 – இந்து தமிழ் திசை

0
0

சிரிப்பு போலீஸ், சீரியஸ் போலீஸ் என சினிமாவில் சுழலும் போலீஸ் அதிகாரிகளைக் கலாய்த்திருக்கும் ஸ்பூஃப் வகை திரைப்படம் ‘தமிழ்ப்படம் 2’.

தமிழகத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கலவரம் வெடிக்கிறது. அதைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் திணறுகின்றனர். இந்த சூழலில் காவல் ஆணையர் கேட்டுக்கொண்டதன் பேரில் போலீஸ் அதிகாரியாக இருந்த சிவா சம்பவ இடத்துக்கு வந்து பிரச்சினையைப் பேசியே தீர்க்கிறார். மீண்டும் காவல்துறையில் சேருமாறு ஆணையர் அழைப்பு விடுக்க, அதை மறுத்துவிட்டு இல்லம் திரும்புகிறார். அப்போது பார்சலில் வரும் போனை சிவாவின் மனைவி திஷா பாண்டே எடுக்க, போன் வெடித்து சம்பவ இடத்திலேயே அவர் பலியாகிறார். மனைவியின் மரணத்துக்குக் காரணமானவனைப் பழிவாங்கும் நோக்கத்துடன் காவல் துறையில் பணியாற்ற விரும்புகிறார். சிவா காவல் துறையில் சேர்ந்தாரா, எதிரியை எப்படிக் கண்டுபிடிக்கிறார், அதிகாரியாகத் தன் கடமையைச் செய்தாரா என்ற கேள்விகளுக்கு கிண்டலும் கிண்டல் நிமித்தமுமாகப் பதில் சொல்கிறது ‘தமிழ்ப்படம் 2’.

தமிழ் திரைப்படங்களை மட்டுமே ஸ்பூஃப் வகையில் கிண்டல் செய்து ‘தமிழ்ப்படம்’ எடுத்த இயக்குநர் சி.எஸ்.அமுதன் இந்த முறை ஆங்கிலப் படங்களையும் துணைக்கு அழைத்துப் பகடி செய்திருக்கிறார். உச்ச நட்சத்திரம், சினிமா, அரசியல் என எதையும் விட்டு வைக்காமல் கிண்டல் செய்யும் இயக்குநரின் துணிச்சல் வரவேற்கத்தக்கது.

அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா என்று டைட்டிலிலியே இயக்குநர் அமர்க்களத்துடன் ஆரம்பிக்கிறார். தமிழ் சினிமாவில் காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் டெம்ப்ளேட் காட்சிகள், மாஸ் பில்டப், ஹீரோயிசம் ஆகியவற்றைக் கிழி கிழி என்று கிழித்திருக்கிறார். வசனங்களில் கூட பகடித்தனத்தை வாரி வழங்கி இருக்கிறார்.

அலுங்காமல் குலுங்காமல் நடிக்க வேண்டும். ஆனால், அதிகமாய் உழைத்ததைப் போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்த வேண்டும். இது கதாநாயகனுக்கான சவால். அந்த சவாலை சிவா மிகச் சாதாரணமாகச் செய்கிறார். எதற்கும் அலட்டிக்கொள்ளாமல் இருப்பது, பிறர் கலாய்த்தாலும் அதை ஏற்றுக்கொள்வது என பாத்திரத்துக்கான பொருத்தமான நடிப்பை சிவா வழங்கியிருக்கிறார். அவரின் நாவிலிருந்து வரும் கவுன்ட்டர் வசனங்களுக்கு தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது. ‘கடைசியில என்னையும் நடிக்க வெச்சுட்டீங்களேடா’ என்று சிவா சொல்லும்போது விசில் பறக்கிறது.

ஐஸ்வர்யா மேனனுக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் மூன்று விதமான தோற்றங்கள். அதைச் சரியாகச் செய்திருக்கிறார். காதல் காட்சிகளில் பாஸ்மார்க் வாங்குகிறார். முதுகில் குத்தினாலும் பீனிக்ஸ் பறவையாக எழுந்துவருவேன் என்று சொல்லும் கலைராணி கவனிக்க வைக்கிறார்.

மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், சந்தானபாரதி ஆகியோர் சிவாவின் நண்பர்களாக நடித்திருக்கின்றனர். அவர்களுக்கான காட்சியில் எந்த அழுத்தமோ, சுவாரஸ்யமோ இல்லை. சந்தானபாரதி நர்ஸ் வேடத்தில் வரும்போது மட்டும் தியேட்டர் வெடித்துச் சிரிக்கிறது. சேத்தன், விஜய் நெல்சன், நிழல்கள் ரவி, ஓ.ஏ.கே.சுந்தர், அஜய் ரத்னம் ஆகியோர் ஸ்பூஃப் படத்துக்கான பாத்திர வார்ப்புகள்.

 ‘பதினாறு வயதினிலே’ ரஜினி, ‘எந்திரன்’ ரஜினி, ‘விஸ்வரூபம்’ கமல், ‘மங்காத்தா’ அஜித் என்று பல்வேறுவிதமான கெட்டப்புகளில் சதீஷ் வருகிறார். வசன உச்சரிப்பில் கூட அவரால் வித்தியாசம் காட்ட முடியவில்லை. நடிப்பில் கொஞ்சம் சமாளித்திருக்கிறார்.

கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம் சேர்க்கிறது. கண்ணனின் இசையில் நான் யாருமில்ல பாடல் ரசிக்க வைக்கிறது. மற்ற பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. சுரேஷ் முதல் பாதியில் மட்டும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். கஸ்தூரி ஆடும் கவர்ச்சிப் பாடல் வேகத்தடையாய் துருத்தி நிற்கிறது.

ஸ்பூஃப் வகை படம் எடுப்பது ஒரு கலை. அதை மூன்று விதமான அடுக்குகளாகப் பிரித்து ரசனைக்கு அழகு சேர்த்திருக்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன். கதாநாயகி லூஸுப் பெண்ணாக மட்டுமே இருக்க வேண்டும், பார்வையற்றவர் சாலையைக் கடக்க உதவ வேண்டும், மழையில் நனைந்தபடி ஐஸ்க்ரீம் சாப்பிட வேண்டும் போன்ற தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் அபத்தங்களைத் தோலுரித்திருக்கிறார்.

கூவத்தூர் விடுதி, தர்மயுத்தம், சமாதியில் சத்தியம், ஆன்ட்டி இந்தியன், சிஸ்டம் சரியில்லை, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்று சமகால அரசியல் நகர்வுகளை மிக சாமர்த்தியமாக நய்யாண்டி செய்திருக்கிறார்.

முன்னணி நடிகர்கள், முன்னணி இயக்குநர்கள் என யாரையும் விட்டு வைக்காமல் பட்டியல் பொட்டு கலாய்ப்பில் உச்சம் தொட்டிருக்கிறார். ‘தேவர் மகன்’, ‘விஸ்வரூபம்’, ‘வேட்டையாடு விளையாடு’, ‘பதினாறு வயதினிலே’, ‘தளபதி’, ‘கபாலி’, ‘காலா’, ‘சத்ரியன்’, ‘வால்டர் வெற்றிவேல்’, ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘பைரவா’, ‘பில்லா’, ‘மங்காத்தா’, ‘வேதாளம்’, ‘வீரம்’, ‘விவேகம்’, ’24’, ‘வாரணம் ஆயிரம்’, ‘சாமி’, ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘ரெமோ’, ‘ரஜினிமுருகன்’, ‘இறுதிச்சுற்று’, ‘விக்ரம் வேதா’, ‘ஆம்பள’, ‘துப்பறிவாளன்’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘இரும்புத்திரை’ ‘பாகுபலி’ என கலாய்க்கப்பட்ட படங்களின் பட்டியல் பெரிது.

எச்.பி.ஓ, நேஷனல் ஜியாகிராபிக் சேனல்களில் உள்ளூர் கலவரம் குறித்து செய்திகள் ஒளிபரப்புவது, மல்லையா சர்பத் கடை, மல்லையா ஏடிஎம், சத்யராஜ் அல்வா கடை குறியீடுகளிலும் அசர வைக்கிறார்.

சிவா பேருந்திலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் காட்சி எந்த வித சுவாரஸ்யமும் இல்லாமல் கடந்துபோகிறது. படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதிவரை ரசிகர்கள் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் திரைக்கதை அமைத்திருப்பது தெரிகிறது. சிரிப்பைத் தாண்டி அட்டகாசமான கிரியேட்டிவிட்டி என்று சொல்லும்படியோ, படம் பார்த்த தாக்கமோ ரசிகர்களுக்கு ஏற்படவில்லை. சிரிக்க மட்டுமே நினைத்து வெவ்வேறு விதங்களில் கலாய்த்திருப்பதை ரசிக்கத் தயாரானால் ‘தமிழ்ப்படம் 2’ தகுதியான, தரமான ஸ்பூஃப் படம்.