முதல் பார்வை: கடைக்குட்டி சிங்கம் – இந்து தமிழ் திசை

0
0

பிரிதல் புரிதலுக்கிடையே உறவுகளின் உன்னதம் பேசும் விவசாயியின் கதையே ‘கடைக்குட்டி சிங்கம்’.

ஆண் பிள்ளை வேண்டும் என்பதற்காக மனைவி விஜி சந்திரசேகரின் தங்கை பானுப்ரியாவை இரண்டாவது திருமணம் செய்துகொள்கிறார் சத்யராஜ். விஜி சந்திரசேகருக்கு 4 மகள்கள் பிறக்க, ஐந்தாவதாக கடைக்குட்டி சிங்கம் கார்த்தி பிறக்கிறார். பானுப்ரியாவுக்கு ஒரு மகள். ஐந்து அக்காக்களுடன் பாசமும் நேசமுமாக வலம் வரும் கார்த்தி பயிர்த் தொழிலை தெய்வமாக நினைத்துச் செய்கிறார். கார்த்தியின் அக்கா மகள்கள் ப்ரியா பவானி சங்கரும், அர்த்தனா பினுவும் தாய்மாமனைத் திருமணம் செய்துகொள்ளும் முனைப்பில் போட்டி போடுகின்றனர். இந்நிலையில் சயிஷாவைப் பார்த்ததும் காதலில் விழுகிறார் கார்த்தி. தன் காதலை அப்பா சத்யராஜிடம் சொல்ல, குடும்பம் உடைஞ்சிடாம பார்த்துக்கோப்பா என்கிறார். இதனிடையே ஒரு ஆணவக்கொலையைத் தட்டிக் கேட்டு பகையை சம்பாதிக்கிறார் கார்த்தி. அந்தப் பகை முரண் என்ன ஆகிறது, கார்த்தி எப்படி குடும்பத்தினரிடம் சம்மதம் பெறுகிறார், அத்தை மகள்கள் நிலை என்ன போன்ற கேள்விகளுக்கு உணர்வுப்பூர்வமாக பதில் சொல்கிறது ‘கடைக்குட்டி சிங்கம்’.

பரிசோதனை முயற்சிக்கான படம், காமெடிப் படம், பேய்ப் படம், அடல்ட் காமெடிப் படம் என வேறு மாதிரியான பாதையில் தமிழ் சினிமா பயணித்துக் கொண்டிருக்கும் நிலையில் குடும்பக் கதைக்கு முக்கியத்துவம் அளித்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்திருக்க, அவர்களுக்கு முக்கியத்துவம் தருவது பெரும் சவால். சத்யராஜ், விஜி சந்திரசேகர், பானுப்ரியா, மௌனிகா, சரவணன், தீபா, மாரிமுத்து, யுவராணி, இளவரசு, ஜீவிதா, இந்துமதி, ஸ்ரீமன், ஜான் விஜய், பொன்வண்ணன், சௌந்தர்ராஜா, வீரசமர், சூரி என்று படத்தில் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தத்தம் கதாபாத்திரங்களை நிறைவாகச் செய்து தடம் பதிக்கிறார்கள். அந்த அளவுக்கு கதாபாத்திரத் தேர்வில் கவனம் செலுத்தி இருக்கும் இயக்குநர் பாண்டிராஜின் ஆளுமை அசர வைக்கிறது.

கார்த்திக்கு கிராமத்து இளைஞன் கதாபாத்திரம் புதிதில்லை. ‘பருத்தி வீரன்’, ‘கொம்பன்’ என்று பார்த்துப் பார்த்து நடித்தவர் இதில் விவசாயி குணசிங்கமாக கெத்து காட்டுகிறார். விவசாயத்தின் பெருமை பேசுவது, இயற்கை விவசாயத்தை வலியுறுத்துவது, குடும்பத்திற்கு ஒன்று என்றால் பதறுவது, அக்காக்களின் சம்மதம் பெறும் பாசப் போராட்டத்தில் பரிதவிப்பது, ஆணவக்கொலையைக் கண்டு பொங்குவது, எதிரிகளைப் பந்தாடுவது என தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார்.

குடும்பம் உடைந்துவிடுமோ என்ற பதற்றத்தை வெளிப்படுத்தும்போதும், பிரச்சினையின் தீவிரம் உணர்ந்து எதிர்வினை புரியும்போதும் சத்யராஜ் அளவாகவும், அழகாகவும் பக்குவமான நடிப்பைத் தந்து பொறுப்பான தந்தையைக் கண்முன் நிறுத்துகிறார்.

சயீஷா சைகல், ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா பினு ஆகிய மூன்று கதாநாயகிகளில் சயீஷா மட்டும் மின்னுகிறார். மாமன் மீதான கோபத்தை வெளிப்படுத்தி வெடிக்கும்போது மட்டும் ப்ரியாவுக்கு நடிக்க வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அர்த்தனாவும் கிளைமாக்ஸ் காட்சியில் தன் இருப்பைப் பதிவு செய்கிறார்.

நெடுநாள் கழித்து சூரியின் ஒன்லைனர் வசனங்களுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. நினைத்து மகிழும்படியான, ரசித்துக் கைதட்டும்படியான நிறைய காட்சிகளில் சூரி பின்னிப் பெடலெடுக்கிறார்.

வேல்ராஜ் கிராமத்தின் அழகை, வயல்வெளிகளின் பசுமையை, மனிதர்களின் ஈர உறவை கேமராவில் அள்ளி வந்து படத்துக்குப் பலம் சேர்த்திருக்கிறார். இமானின் இசையில் சண்டைக்காரி, செங்கதிரே பாடல்கள் ரிப்பீட் கேட்க வைக்கின்றன. ரூபன் இரண்டாம் பாதியில் மட்டும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம்.

‘பாண்டவர் பூமி’, ‘சமுத்திரம்’, ‘மாயாண்டி குடும்பத்தார்’ பாணியிலான குடும்பப் படம்தான் ‘கடைக்குட்டி சிங்கம்’. குடும்பத்தோடு சேர்ந்து, பார்த்து, ரசித்து, சிலாகிக்கும் அளவுக்கு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். முகம் சுளிக்க வைக்கும் எந்தக் காட்சியும் வைக்காததற்கு அவரைப் பாராட்டலாம். இயற்கை விவசாயம், ஆணவக்கொலை, மாணவர்கள் தற்கொலை, தாய்மாமன் என்பதற்காகவே சிறுமி என்றும் பாராமல் கல்யாணம் செய்துகொள்ள நிர்பந்திக்கும் சூழல் என படத்தில் நிறைய கருத்துகளை வலிக்காமல் லாவகமாகச் சொல்கிறார் இயக்குநர் பாண்டிராஜ். விவசாயி என்பதை பெருமையோடு சொல்லிக்குள்ளும் சூழலை விவரித்திருக்கும் விதம் ரசிக்க வைக்கிறது. ரேக்ளா ரேஸ் காட்சி அருமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருவிழாவுக்கான மனநிலையைப் படம் கொடுத்திருப்பதோடு, உறவுகளுக்குள் இருக்கும் பிரச்சினைகள், சங்கடங்கள், மனக்குறைகள் ஆகியவற்றையும் அலசி இருக்கும் இயக்குநர் எதிர் கதாபாத்திரத்தைக் கட்டமைத்திருப்பது மட்டும் பலவீனமாக இருக்கிறது. இதனால் வில்லன் – ஹீரோ மோதல் காட்சிகள் எடுபடவில்லை. அதை கார்த்தி ஈடு செய்து மிக பலம் பொருந்திய நாயகனாக வடிவமைத்துக்கொண்டு படத்தைத் தூக்கி நிறுத்துகிறார். இரண்டாம் பாதியில் சில காட்சிகளின் நெடுந்தொடர் வாடை அடித்தாலும் உறவுகளின் ஆழத்தை அழுத்தமாகப் பேச வைத்திருப்பதால் ‘கடைக்குட்டி சிங்கம்’ கண்ணியத்துக்குரிய படமாகிறது.