முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

0
0

சத்துணவு திட்டத்திற்கு முட்டை கொள்முதல் செய்யப்படும் விவகாரத்தில் 5,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 51 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், அங்கன்வாடி குழந்தைகள் தமிழக சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறுகின்றனர். பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் 5 நாட்களும் கலவை சாதத்துடன், முட்டை வழங்கப்படுகிறது.

இதற்காக ஆண்டுக்கு ரூ.500 கோடியில் 1 கோடி முட்டை கொள்முதல் செய்யப்படுகிறது. ஏற்கெனவே முட்டையை வழங்கி வரும் நிறுவனத்துக்கான ஒப்பந்தம் இம்மாதம் முடிகிறது. எனவே, புதிய ஒப்பந்தத்துக்கான ஒப்பந்தப் புள்ளி கடந்த ஜூன் 10-ம் தேதி கோரப்பட்டு, வியாழக்கிழமை ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டன.

இதற்கிடையில், தமிழக அரசுக்கு முட்டை வழங்கி வரும் கிறிஸ்டி நிறுவனத்தில் வருமானவரித் துறை சோதனை நடத்தியது.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், “தமிழக மக்கள் மொட்டை போடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.  இந்த முட்டை கொள்முதல் விவகாரத்திலும் ரூ.5,000 கோடி அளவில் மொட்டை போடப்பட்டிருக்கிறது. இதுகுறித்து உரிய விசாரணை நடைபெற வேண்டும்” என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.