முட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு களங்கம் கற்பிக்க தினகரன் முயற்சி: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

0
0

முட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு தமிழக அரசின் மீது களங்கம் கற்பிக்க டிடிவி தினகரன் முயற்சிப்பதாக, மீன்வளத் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விவரம்:

நிலக்கரி இறக்குமதி செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதே? இதுகுறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளாரே?

சிஏஜி அறிக்கையை வைத்து அவர் சொல்கிறார். திமுக ஆட்சியிலும் சிஏஜி அறிக்கையில் நிறைய குறைகள் சொல்லப்பட்டன. எங்களால் பட்டியல் போட முடியும். இதுகுறித்த விளக்கத்தை சம்மந்தப்பட்ட துறை உரிய நேரத்தில் அளிக்கும்.

முட்டை கொள்முதல் முறைகேடு போன்று வேறு பல முறைகேடுகளும் வர வாய்ப்புள்ளதாகவும், தமிழக ஆட்சியாளர்கள் அரசாங்கத்தை தங்கள் சொந்த நிறுவனமாக கருதுவதாகவும் டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளாரே?

இது அடிப்படை ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டு. வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளதாக வந்த தகவல்களின் அடிப்படையில் கிறிஸ்டி நிறுவன உரிமையாளர்களின் இல்லங்களில் வருமான வரி சோதனை நடைபெறுகிறது. முட்டை கொள்முதலில் முறைகேடு என வருமான வரித்துறை சொல்லவில்லை. இந்த விவகாரம் திசை திருப்பப்படுகின்றது.

முட்டை தவிர்த்து வேறு விதமான பொருட்களும் அவர்கள் சப்ளை செய்யலாம். வருமான வரி சோதனைக்கும் முட்டை கொள்முதலுக்கும் சம்மந்தப்படுத்த முடியாது. வரி ஏய்ப்பு நடைபெற்றதா இல்லையா என்பதுதான் கேள்வி. அது தொடர்பாகத்தான் வருமான வரித்துறை விசாரணை நடக்கிறது. இவர்கள் ஏன் துடிக்கிறார்கள்? முட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போட்டு தமிழக அரசின் மீது களங்கம் கற்பிக்க முயற்சி நடைபெறுகிறது. இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை.

இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?

கச்சத்தீவு திமுகவால் 1974-ம் ஆண்டில் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அதை மீட்பதுதான் இப்பிரச்சினைக்கு நிரந்தரமான சிறந்த தீர்வாகும். அதை மீட்க மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வருவாய் துறையையும் இந்த வழக்கில் இணைத்திருக்கிறோம். எல்லை கோடு இல்லாமல் காற்றின் திசை மாறி தவறுதலாக எல்லை தாண்டும் மீனவர்களை தாக்கக் கூடாது, படகுகள் மற்றும் வலைகளை சேதப்படுத்தக் கூடாது என ஜெயலலிதா கடந்த காலங்களில் மத்திய அரசுக்கு வலியுறுத்தினார்.

அதன்பின் மத்திய அரசு இந்த கோரிக்கையை இலங்கை அரசிடம் வலியுறுத்தியது. 2010-லிருந்து இன்று வரை தவறுதலாக எல்லை தாண்டி இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 3,010 மீனவர்களை மீட்டிருக்கிறோம். 400-500 படகுகள் மீட்கப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. விரைவில் அதனை மீட்போம். 3 படகுகளில் சென்ற மீனவர்கள் தான் இலங்கையில் தற்போது சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களை விடுபிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனரே?

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி அதன் அடிப்படையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஆணையம் அனைத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளது. மக்கள், விவசாயிகள் நலன் காப்பது தமிழக அரசு. இயன்றவரை அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை நிச்சயமாக தமிழக அரசு எடுக்கும்.

தமிழக அரசு ஒத்துழைக்கவில்லையென்றால் சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ விசாரணையை சந்திக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளதே?

உயர் நீதிமன்றம் அதுபற்றி கருத்து சொல்லியிருக்கலாம். அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் பதில் கொடுத்து விடுவோம். இதுதொடர்பாக தமிழக அரசு பல்வேறூ நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கோயில் சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். 50 ஆண்டுகளாக இந்த பிரச்சினை உள்ளது. எங்கெல்லம் சிலைகள் கடத்தப்பட்டதோ அதனை மீட்க ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். அதே வழியில் நடவடிக்கைகள் எடுத்து காணாமல்போன சிலைகளை மீட்டு, கோயிலை பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசு நிச்சயம் மேற்கொள்ளும்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.