மீன்கள் மீது பார்மாலின் தெளிப்பு வதந்திகளை நம்ப வேண்டாம்: அமைச்சர் ஜெயக்குமார்

0
0

மீன்கள் தேவை அதிகம் இருக்கும்போது பதப்படுத்தவேண்டிய அவசியமே இல்லை. வீண் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம்,மீன் உணவை தாராளமாக உண்ணலாம் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னையில் விற்பனையாகும் மீன்களை பதப்படுத்த பார்மாலின் என்ற மருந்து கலக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனால் ரசாயனம் பூசப்பட்ட மீன்களை உண்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறப்பட்டது.

இதனால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. மீன் வாங்கி உண்பவர்கள், அதை தவிர்த்தனர். இதனால் மீன் விற்பனை பாதிக்கப்பட்டது. இதையடுத்து மீன் விற்பனை மையங்களில் உள்ள மீன்களை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டனர். ஆனால் அப்படி ரசாயனம் எதுவும் பூசப்படவில்லை என தெரிய வந்தது.

இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை அமைச்சர் ஜெயக்குமார் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பதப்படுத்தப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாக, தவறான கருத்து பரப்பப்பட்டதால் மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். பல இடங்கள் மீன்கள் சேகரித்து சோதனை செய்யப்பட்டது.

எந்த பாதிப்பும் இல்லை என்கிற அறிக்கை மட்டுமே வந்துள்ளது. மீனவர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் இன்று மீனவர்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 70 சதவிகிதம் மீன்கள் மட்டுமே பிடிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 30 சதவிகிதம் தேவை உள்ளது. அப்படி இருக்க கெமிக்கல் போட்டு பதப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு கொண்டு போகும்போது ஐஸ் பெட்டியில் போட்டு கொண்டுச்செல்வார்கள்.

தற்போது குளிரூட்டப்பட்ட வாகனங்கள் உள்ளது. இதில் 10 நாட்கள் வரை பாதுகக்கலாம். ரசாயனம் கலக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே பொதுமக்கள் வீணாக அச்சம் கொள்ளவேண்டாம். இது அனைவருக்கும் ஏற்ற அருமையான அத்யாவசியமான உணவு.

வீணான வதந்திகளை பரப்பி மீனவர்கள் நலனில் விளையாட வேண்டாம். மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் மார்க்கெட்டில் மீன்கள் சாம்பிள் எடுத்து மீனவ பல்கலைக்கழகம் மூலம் பரிசோதனை செய்து கொள்ளலாம். அதன்மீதும் நம்பிக்கை இல்லை என்றால் நீங்களே நேரடியாக பரிசோதிக்கலாம். சாதாரண டெஸ்ட்தான் அது.

மீன் மார்க்கெட்டில் மக்கள் முன்னிலையில் மீன்வளத்துறை, உணவு பாதுகாப்பு துறை, உள்ளாட்சி நிர்வாகம் இணைந்து. மீன்கள் சோதனை செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். 100 சதவிகிதம் நமது மாநிலத்தில் பார்மாலின் கலப்பு இல்லை. மற்ற மாநிலங்களில் உள்ள மீன்கள் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது.

சிந்தாதிரிப்பேட்டையில் சாம்பிள் எடுக்கப்பட்டதாக கூறுகிறார்கள், அங்கு மற்ற மாநில மீன்களும் வருகிறது. அந்த சாம்பிள் எடுக்கப்பட்டிருக்கலாம். அப்படி இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இயற்கையான மீன் சந்தைக்கு வர வேண்டும் என்பதை வருங்காலத்தில் உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளிமாநிலத்திலிருந்து இவ்வாறு கொண்டுவரப்படும் மீன்கள் சிக்கினால் என்ன நடவடிக்கை உள்ளதோ அதன்படி கடுமையாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும். அனைவருக்கும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு சோதித்தும் இதுவரை அப்படி வரவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.