மீண்டும் நிரம்புகிறது மேட்டூர் அணை: நீர்வரத்து ஒரு லட்சம் கனஅடியாக உயர்வு; வெள்ள அபாயம்

0
1

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் ஒரு லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ள நிலையில், இந்தாண்டில் இரண்டாவது முறையாக அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி சாதனை படைக்க உள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. 

கர்நாடகா, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழையால் அணைகள் நிரம்பியதை அடுத்து, விநாடிக்கு 1.43 லட்சம் கனஅடி உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு, மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 8 ஆயிரத்து 311 கனஅடியாக இருந்த நீர்வரத்து வியாழக்கிழமை விநாடிக்கு 16 ஆயிரத்து 969 கனஅடியாக அதிகரித்து.

வெள்ளிக்கிழமை இரவு 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர் மட்டம் 117.32 அடியாகவும், நீர்வரத்து 80 ஆயிரம் கனஅடியாகவும், நீர் வெளியேற்றம் 50 ஆயிரம் கனஅடியாகவும் இருந்தது.

இந்நிலையில், சனிக்கிழமை காலை நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர் மட்டம் 119.08 அடியாகவும், நீர் திறப்பு விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடியாகவும், நீர் இருப்பு 92.01 டிஎம்சியாகவும் உள்ளது. இன்றைய தினமே மேட்டூர் அணை இந்த ஆண்டில் 2-வது முறையாக 120 அடியை எட்டி சாதனை படைக்க உள்ளது.

ஏற்கெனவே காவிரி கரையோர மக்களுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, “காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எக்காரணம் கொண்டு பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. செல்ஃபி உள்ளிட்ட எந்த வகையிலான படமும் ஆற்றில் இறங்கி எடுக்கக்கூடாது. 8 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோர பகுதிகளில் அபாயகரமான இடங்களில் கண்காணிப்புக் குழு அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.