மீண்டும் அதே இடத்தில் கருணாநிதி சிலை: கி.வீரமணி அறிவிப்பு

0
0

உலகமே திரண்டு இறுதி மரியாதை செலுத்திய ஒரு மாமனிதர், இனமானத் தலைவர் கருணாநிதியின் சிலை ஒரு வரலாற்று சின்னமாக, கம்பீரமாக மீண்டும் அதே இடத்தில் எழுந்து நிற்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கி.வீரமணி சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “அறிவு ஆசான் பெரியாரின் ஆணை ஒன்றே பெரிதெனக் கொண்டு அதைச் செயல்படுத்துவதே தமது வாழ்வின் வரலாற்றுக் கடமை என்று கருதி உழைப்பவர்கள் கருஞ்சேனையான திராவிடர் கழகத்தினர். 1968 ஆம் ஆண்டிலும், 1971 ஆகஸ்டு 14 ஆம் தேதியிலும் இருமுறை அறிவித்தார் பெரியார். 1968 ஆம் ஆண்டில் அண்ணா முதல்வராக இருந்தபோதே கருணாநிதிக்கு சிலை வைக்க உள்ள தகுதிபற்றி இரு அறிக்கைகள் எழுதியதோடு, ஆகஸ்டு 14, 1971 இல் பெரியார் திடலில் நடைபெற்ற பாராட்டுக் கூட்டத்தில், பெரியார், தனது குருகுல மாணவரான கருணாநிதி செயற்கரிய சாதனை செய்தவர் என்பதால் சென்னை தலைநகரில் அவருக்கு சிலை வைக்கவேண்டும் என்று முழங்கினார். அதனை குன்றக்குடி அடிகளார் போன்றவர்கள் அருகே அமர்ந்து ஆமோதித்தனர். அதே மேடையில் கருணாநிதி சிலை அமைப்புக் குழுவையும் அறிவித்தார் பெரியார்.

திகைத்தார் முதல்வர் கருணாநிதி

பெரியார் பேசியதைக் கேட்டு மேடையிலிருந்த அப்போதைய முதல்வர் கருணாநிதி. பெரியார் கட்டளையை எப்படி மறுப்பது? சங்கோஜமும், சங்கடமும் அடைந்தார். அப்போது சமாளிக்க, திமுக சார்பில் பெரியாருக்குச் சிலை வைத்த பிறகு வேண்டுமானால், அதுபற்றி ஏற்பாடு செய்யலாம் என்பதுபோல கூறி, வசமாக அன்புப் பிடியில் அகப்பட்டுக் கொண்ட கருணாநிதி தப்பிக்க முயன்றார்.

அதே மேடையில் சிலை அமைப்புக் குழு அறிவிப்பு

சிலை குழுவுக்குப் புரவலராக பெரியார், தலைவராக குன்றக்குடி அடிகளார் எம்எல்சி, துணைத் தலைவர்களாக அப்போதைய சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு, மேயர் சா.கணேசன், ஏ.என்.சட்டநாதன் ஆகியோரும், செயலாளராக நான் எனவும் அறிவித்தார் பெரியார்.

மேடையிலே நன்கொடையையும் பெரியார் முதல் அனைவரும் அறிவித்தனர். காலம் ஓடியது. பெரியார் மறைந்து, திராவிடர் கழகத் தலைவரானார் மணியம்மையார். பெரியார் விட்டுச் சென்ற பணிகளை அவர்கள் போட்டுத் தந்த பாதையில் எவ்வித சபலங்களுக்கும் ஆளாகாமல் செய்து முடிப்போம் என்று 1974 ஜனவரி 6-ல் திருச்சியில் கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் எடுத்த முடிவுக்கு ஏற்ப உடல் நலிந்த நிலையிலும், உள்ள வலிமை தளராது பணி தொடர்ந்தார் மணியம்மையார்.

திறக்கப்பட்டது பெரியார் சிலை

திமுக சார்பில் சென்னை அண்ணா சாலையில், பேராசிரியர் க.அன்பழகன் தலைமையில், மணியம்மையார் முன்னிலையில், பெரியார் சிலையை முதல்வரான கருணாநிதி திறந்து வைத்து, வரலாற்றின் பொன்னேட்டினை இணைத்தார்.

அந்நிகழ்ச்சியில் பேசிய மணியம்மையார், பெரியாருக்கு சிலை வைத்த பின்பு, தனக்கு சிலை வைக்கலாம் என்று கூறி, அதை ஏற்கெனவே காலந்தாழ்த்திய கருணாநிதி இனியும் சாக்குப் போக்கு, மறுப்பு கூறி, எங்களிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. அடுத்து உடனடியாக திராவிடர் கழகம் அண்ணா சாலையில் முழு உருவ வெண்கலைச் சிலை அமைத்துத் திறப்போம், இதற்கு மறுப்பு ஏதும் கூறக்கூடாது என்றார்.

திறக்கப்பட்டது முதல்வர் கருணாநிதி சிலை

முதல்வர் கருணாநிதி வெளியூர் பயணத்தில் இருந்தபோது, இடையில் அதிமுகவினால் ஏற்பட்ட சட்டப் போராட்டத்தையும் திராவிடர் கழகம் எதிர் கொண்டு வென்று, அண்ணாசாலை- ஜெனரல் பேட்டர்ஸ் சாலை சந்திப்பில் முறைப்படி அரசாணை பெற்று, 21.9.1975 அன்று பெரியதோர் திருவிழாவாக நடத்தினோம்.

மணியம்மையார் தலைமையில், மகாசந்நிதானம் குன்றக்குடி அடிகளார் சிலையினைத் திறந்து வைத்தார். டாக்டர் ராஜா சர்.முத்தையா, தமிழ்நாடு கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் மணலி சி.கந்தசாமி எம்எல்ஏ, சென்னை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் சி.டி.நடராசன் எம்பி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். நாமகிரிப்பேட்டை கிருஷ்ணன் குழுவினரின் நாதசுர இன்னிசை விருந்து, இசை மாமணி சீர்காழி கோவிந்தராசன் கருணாநிதியைப் பற்றி சில பாடல்களைப் பாடினர்.

உடைத்தனர் சிலையை!

அதன் பிறகு தமிழக முதல்வராக இருந்த எம்ஜிஆர் நோயின் கொடுமையால் நம்மைவிட்டுப் பிரிந்த நிலையில், 1978-ல் மணியம்மையார் மறைந்து, நான் திராவிடர் கழகப் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று நடத்திய காலகட்டத்தில், சென்னை நகரமெங்கும் நடைபெற்ற கலவரத்தில், சில விஷமிகள் திட்டமிட்டே கருணாநிதி சிலையை உடைத்தனர். அந்தப் படம் செய்தித்தாள்களில் வந்தபோதுகூட எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கருணாநிதி,

உடன் பிறப்பே,

செயல்பட விட்டோர்

சிரித்து மகிழ்ந்து நின்றாலும்

அந்த சின்னத்தம்பி

என் முதுகிலே குத்தவில்லை –

நெஞ்சிலே தான் குத்துகிறான்;

அதனால் நிம்மதி எனக்கு!

வாழ்க! வாழ்க!

என்று கவிதை வரிகள் எழுதி, தன்மீது ஒரு கடலூரில் காலணி வீசப்பட்டபோது, மறு செருப்பையும் தேடி வாங்கி வைத்த பெரியாரின் துணிவுமிக்க பாரம்பரியத்திற்கான இலக்கியமாக நடந்துகாட்டி உயர்ந்தார் கருணாநிதி உலகத்தார் முன்.

மீண்டும் அதே இடத்தில் சிலை – சில தடங்கல்கள்

அதன்பின் அதே இடத்தில் கருணாநிதியின் ஒரு புது சிலையை உருவாக்கி வைப்பதற்கான முயற்சிகளில் வேகமாக ஈடுபட்டபோது, அவரது குடும்பத்தினரில் சிலரும், திமுகவில் உள்ள சிலரும் தயக்கமும், மறுப்பும் தெரிவித்தனர். இதை மீறி வைக்கவேண்டாம் என்று எம்மிடம் கருணாநிதி உரிமை எடுத்துக்கொண்டு கூறினார்.

அதை ஏற்று அன்று முதல் நேற்றுவரை அமைதியாக இருந்தோம், எங்கள் கடமையைப் பின்னுக்குத் தள்ளி. பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றாமல் தானே அவரைப் புதைத்தோம் என்று ஆதங்கப்பட்ட மானமிகு சுயமரியாதைக்காரரான கருணாநிதி தம் வாழ்நாளில், அவர் மருத்துவமனையில் போராடிக் கொண்டிருந்த இறுதி நாளில், அந்த வெற்றியைப் பெற்றார்; பாக்கி வைக்காமல் கடமையைச் செய்தார்.

தந்தையும் – தாயும் இட்ட ஆணை

திராவிடர் கழகம் தாய்க்கழகத்தினர். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்றபடி, தாயின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் செயலாற்றுவதுதானே தலையாய கடமை? எனவே, நமது திராவிட இனத்தின் தீரமிக்க மானமிகு சுயமரியாதைக்காரரான கருணாநிதியின் சிலையை அதே இடத்தில், சென்னை அண்ணா சாலையில் திறந்து வைக்க அனைவரும் ஒத்துழைப்புத் தரவேண்டுகிறோம்.

தமிழ்நாடு அரசு உள்பட அனைவரின் ஆதரவும் தேவை

ஏற்கெனவே தமிழக அரசும், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பும் சிலைக்கு ஆதரவான நிலைப்பாட்டைத் தந்துள்ளன. இப்போது அவரது சிலை, அண்ணா சாலையில், தந்தை பெரியார் சிலை, அறிஞர் அண்ணா சிலை, கலைஞர் சிலை, எம்.ஜி.ஆர். சிலை என்ற வரிசையில் அமைவது எல்லா வகையிலும் பொருத்தமாகவே அமையும் என்பதால், தமிழக அரசு உள்பட அனைவரது ஒத்துழைப்பும் கிடைக்கும் என்றும் பெரிதும் நம்புகிறோம். எப்படியும் நம்மிடம் தயாராக இருக்கும் முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு விரைவில் உரிய காலத்தில் நடந்தே தீரும்.

நன்றிக்கு அடையாளம்

இது ஒரு நன்றி காட்டும் நயத்தக்க பண்பாட்டின் அடையாளம். இந்தியாவே, ஏன் உலகமே திரண்டு இறுதி மரியாதை செலுத்திய ஒரு மாமனிதர் இனமானத் தலைவரின் சிலை ஒரு வரலாற்று சின்னமாக, கம்பீரமாக மீண்டும் எழுந்து நிற்கும்; நிற்க வைப்போம்” என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.