‘மாரி 3’ குறித்து தனுஷ் தகவல்

0
0

‘மாரி 2’ படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததாகத் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் ‘மாரி 3’ குறித்தும் சூசகமாகப் பதிலளித்திருக்கிறார்.

’வடசென்னை’ படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவான ‘மாரி 2’வில் நடிக்கத் தொடங்கினார் தனுஷ். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது.

சமீபத்தில் பிரபுதேவா நடன அமைப்பில் பாடலொன்றைப் படமாக்கியது படக்குழு. இதனைத் தொடர்ந்து ‘மாரி 2’ படப்பிடிப்பு முழுமையாக முடிவு பெற்றதாகத் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, “’மாரி 2’ படப்பிடிப்பு முடிவுற்றது. மீண்டும் மாரியாக நடித்ததில் சந்தோஷம். மேலும், மீண்டும் மாரியாக நடிக்கக் காத்திருக்கிறேன். இக்கதாபாத்திரத்தில் நடிப்பது சந்தோஷத்தை அளிக்கிறது. படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்று தனுஷ் தெரிவித்திருக்கிறார்.

மீண்டும் மாரியாக நடிக்கக் காத்திருப்பதாகத் தனுஷ் தெரிவித்திருப்பதால், ‘மாரி 3’ உருவாக வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது.

’மாரி 2’வில் சாய் பல்லவி, வரலட்சுமி, ரோபோ ஷங்கர், கிருஷ்ணா, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் தனுஷுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைக்க, தனுஷ் தயாரித்திருக்கிறார்.

 ‘மாரி 2’ படப்பிடிப்பு முடிவடைந்ததைத் தொடர்ந்து, தனது இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் தனுஷ்.