மாடு, பன்றி இறைச்சி சாப்பிட்ட நேரு பண்டிட் அல்ல: பாஜக எம்எல்ஏ சர்ச்சைப் பேச்சு

0
0

மாடு மற்றும் பன்றி இறைச்சியை சாப்பிட்ட  முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு,  எப்படி பண்டிட் ஆக இருக்க முடியும் என பாஜக எம்எல்ஏ பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ கியான் தேவ் அஹுஜா, அவ்வப்போது அதிரடியாக பேசி சர்ச்சையை கிளப்பி வருகிறார். டெல்லி ஜவகர்லால் பல்கலைக்கழகம், போதை மருந்து மற்றும் செக்ஸ் கூடாரமாக இருப்பதாக பேசி அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில் ‘‘காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்கு வங்கி அரசியலுக்காக தேர்தல் நேரத்தில் மட்டும் கோயிலுக்கு செல்கிறார். அவருக்கு இந்து மத பண்பாடுகளில் நம்பிக்கை இல்லை. ஆனால் ராகுல் காந்தி தனது பாட்டி இந்திரா காந்தியிடம் இருந்து கோயிலுக்கு செல்லும் பழக்கத்தை கற்றுக் கொண்டதாக சச்சின் பைலட் போன்றோர் பொய் சொல்கின்றனர்.

இதை அவர்களால் நிருபிக்க முடியாது. அவ்வாறு நிருபித்தால் நான் பதவி விலக தயாராக இருக்கிறேன். இல்லாவிட்டால் அவர்கள் பதவி விலக வேண்டும். நேரு குடும்பத்தினர் பண்டிட் என்ற பெயரை சேர்த்துக் கொண்டு மக்களை ஏமாற்றுகின்றனர்.

மாடு மற்றும் பன்றிக் இறைச்சியை சாப்பிட்ட நேரு எப்படி பண்டிட்டாக இருக்க முடியும். அனைத்து சமூக தீமைகளுக்கும் நேரு குடும்பமே காரணம். அரசியலுக்காக மதம் மற்றும் ஜாதியை நேரு குடும்பத்தினர் பயன்படுத்துகின்றனர். நேரு குடும்பத்தினர் பெயரில் உள்ள நினைவு சின்னங்களை இடித்து தள்ள வேண்டும்’’ எனக் கூறினார்.