மழை நீர் சேமிப்பு இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

0
1

மழை நீர் சேகரிப்பு இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு முதல் கட்டாய மழை நீர் சேகரிப்புத் திட்டம் என்ற சட்டம் தமிழக அரசு கொண்டு வந்து நடைமுறையில் உள்ளது. குறைந்துவரும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ஜெயலலிதா ஆட்சியில் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இச்சட்டத்தின்படி அனைத்து வீடு மற்றும் அனைத்து கட்டிடங்களும் கட்டாயமாக மழை நீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும். தேவைப்படுவோருக்கு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உருவாக்கிக் கொடுக்கும். தவறினால் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆரம்பத்தில் கடுமையாகப் பின்பற்றப்பட்ட மழை நீர் வடிகால் நடைமுறை பின்னர் படிப்படியாக குறைந்தது. யாரும் அதைப் பின்பற்றவில்லை. வரும் 2020-ம் ஆண்டு சென்னை உட்பட இந்தியாவின் பெரு நகரங்களில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாகக் குறையும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழைநீர் வடிகால் குறித்த பொதுநல வழக்கு ஒன்றை வழக்கறிஞர் தியாகராஜன் என்பவர் தொடுத்துள்ளார்.

அவரது மனுவில், ”மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என விதி உள்ளது, ஆனால் அண்மைக் காலங்களில் எந்த ஒரு கட்டிடத்திலும் மழை நீர் சேமிப்பு வசதி ஏற்படுத்தவில்லை, மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிக்க உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

 இந்த வழக்கு நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து எட்டு வாரங்களுக்குள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.