மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் வழக்கில் கைது

0
0

மலேசியாவில் ஊழல் புகாருக்கு ஆளான முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் இன்று கைது செய்யப்பட்டார்.

மலேசியாவில் அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நஜீப் ரசாக் தோல்வி அடைந்தார். எதிர்க்கட்சிகள் கூட்டணி வெற்றி பெற்று மகாதிர் முகமது பிரதமரானார். அதன்பின் நஜீப் மீதான ஊழல் வழக்கு விசாரணை வேகம் பெற்றது. அண்மையில் அவரின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் மொத்த ரூ.1,872 கோடி மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதில் ரொக்கம் மட்டும் ரூ.205 கோடி ஆகும். 1,400 நெக்லஸ், 2,200 மோதிரங்கள் உட்பட மொத்தம் 12 ஆயிரம் நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுதவிர, 567 விலை உயர்ந்த ஹேண்ட்பேக்குகள், 423 கைக்கடிகாரங்கள், 234 ஜோடி சன்கிளாஸ்கள் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில் மலேசிய மேம்பாட்டு நிறுவன மோசடி வழக்கில் கோலாலம்பூரில் உள்ள ஊழல் தடுப்பு ஆணையத்தில் நஜீப் ரசாக் ஆஜரானார். அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த ஊழல் வழக்கு தொடர்பாக நஜீப் நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்று மலேசிய அரசு ஏற்கெனவே உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அவர் இன்று கைது செய்யப்பட்டார். மலேசிய ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரசாக் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். தற்போது அவரை வீட்டிக்காவலில் வைத்துள்ளனர். அவர் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட பின்பு அவர் நீதிமன்றத்தல் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.