மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று ஜெ.வுக்கு நினைவு திரும்பிய பின்னர் பார்த்தேன்: திவாகரன் மகன் ஜெய்ஆனந்த் தகவல்

0
0

ஜெயலலிதாவுக்கு நினைவு திரும்பிய பின்னர் மருத்துவமனை அறையில் கண்ணாடி வழியாக அவரைப் பார்த்தேன் என்று திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் விசாரணை ஆணையத்தில் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், நேற்று காலையில் திவாகரனின் மகன் ஜெய்ஆனந்த் ஆஜர் ஆனார். அவரிடம் சுமார் இரண்டரை மணி நேரம் விசாரணை நடந்தது.

விசாரணை முடிந்து வெளியே வந்த ஜெய்ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறும்போது, “2011-ம் ஆண்டு ஜெயலலிதா கோடநாடு வந்தபோது பார்த்தேன். பின்னர் ஜெயலலிதாவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று இரவு, அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, அறையின் கண்ணாடி வழியாகப் பார்த்தேன். அதை ஆணையத்தில் தெரிவித்து இருக்கிறேன். மருத்துவமனையில் எடுக்கப்பட்ட வீடியோ குறித்து என்னிடம் எதுவும் கேட்கவில்லை. மீண்டும் வரச்சொல்லியும் கூறவில்லை” என்றார்.

அப்போலோ மருத்துவமனை எக்கோ டெக்னிசீயன் நளினியும் நேற்று விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி மற்றும் வழக்கறிஞர்கள் பல கேள்விகளை கேட்டனர். இன்று(6-ம் தேதி) அப்போலோ மருத்துவர் ரமா, செவிலியர் விஜயலட்சுமி ஆகியோர் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.