மரக்கன்றுகளை சிறப்பாக வளர்க்கும் பள்ளி; குழந்தைகளுக்கு ‘தங்க மோதிரம்’ பரிசு: மதுரை இளைஞர்களின் வித்தியாச முயற்சி

0
0

மதுரை அருகே 6 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு 500 மரக்கன்றுகளை வழங்கிய இளைஞர்கள், அந்த மரக் கன்றுகளைச் சிறப்பாக வளர்க்கும் குழந்தைகளுக்கு ‘தங்க மோதிரம்’ பரிசாக வழங்குவதாக அறிவித்ததோடு, அந்த தங்க மோதிரங்களைத் தற்போதே அந் தந்த பள்ளி தலைமை ஆசிரியர் களிடம் ஒப்படைத்து அசத்தி உள்ளனர்.

மதுரை அருகே அமைந்துள்ள திருவாதவூர் கிராமம், திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் பிறந்த ஊர். இந்த ஊரில் இளைஞர்கள் 120 பேர் ஒன்று கூடி ‘கனவு கிராமம்’ என்ற அமைப்பை தொடங்கி யுள்ளனர். இவர்கள், திருவாதவூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடுவது, ரத்த தானம் செய்வது உள்ளிட்ட சமூகப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாதவூர் கிராமம், முந் தைய காலங்களில் மூன்று போகம் செழிப்பாக விவசாயம் நடந்த கிராமம். நாளடைவில் ரசாயன உரம் பயன்பாடு உள் ளிட்ட காரணங்களால் மண்வளம் பாதிக்கப்பட்டதாலும், தண்ணீர் பிரச்சினையாலும் விவசாயம் முன்புபோல் சிறப்பாக இல்லை. அதனால், மண் வளத்தைப் பாது காக்க, இயற்கை வேளாண்மை பற்றி விவசாயிகளிடம் இந்த இளைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருவாதவூர், உலகசித்தன்பட்டி, சமத்துவபுரம், டி.மாணிக்கம்பட்டி, டி.கோவில் பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள 6 அரசு தொடக்கப் பள்ளி களைத் தேர்வு செய்து, அங்கு படிக்கும் குழந்தைகளுக்கு 500 மரக்கன்றுகளை இந்த இளைஞர்கள் நேற்று வழங்கினர்.

அந்த மரக்கன்றுகளைப் பள்ளிகளில் சிறப்பாக பராமரித்து வளர்க்கும் குழந்தைகளுக்கு ‘தங்க மோதிரம்’ பரிசாக வழங்குவதாக அறிவித்துள்ளனர். பள்ளிக்கு ஒரு குழந்தையை தேர்வு செய்து, அவர்களுக்கு தங்க மோதிரம் வழங்கப்படும் என்று அறிவித்தனர். வெறும் அறிவிப்புடன் நின்று விடாமல், இப்போதே அந்த மோதிரங்களைச் சம்பந்தப் பட்ட 6 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைத்தனர்.

மரக்கன்றுகளை வழங்கு வதோடு தங்களின் கடமையை முடித்துவிடாமல், அதை வளர்ப்ப தற்கும் ஊக்கமளிக்கும் இந்த இளைஞர்களின் செயல்பாடு கிராம மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ‘கனவு கிராமம்’ அமைப்பின் நிர்வாகி எஸ்.ஜெகநாதன் கூறியதாவது:

‘‘கடந்த ஆண்டு ஒரு வீட்டுக்கு ஒரு சந்தன மரக்கன்று வீதம் எங்கள் கிராமத்தில் 620 மரக்கன்றுகளைக் கொடுத்தோம். தற்போது 6 அரசு பள்ளிகளைத் தேர்வு செய்து 500 மா மரக்கன்றுகளை வழங்கி உள்ளோம்.

குழந்தைகளிடம் கொண்டு செல்லப்படும் எந்த விஷயமும், அவர்கள் மனதில் ஆழமாகப் பதியும் என்பதால் இந்த முயற் சிக்கு தொடக்கப் பள்ளிகளைத் தேர்வு செய்தோம்.

மரக்கன்றுகளைச் சிறப்பாக வளர்க்கும் 6 குழந்தை களுக்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி, தலா ஒரு கிராம் மதிப்புள்ள தங்க மோதி ரங்களைப் பரிசாக தர உள்ளோம்.

மேலும், எங்கள் திருவாதவூர் மட்டுமின்றி, பக்கத்து கிராமங் களையும் தற்சார்பு கிராமங்களாக மாற்றும் முயற்சியை மேற் கொண்டுள்ளோம். அதாவது, இளைஞர்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புக்காக வேறு இடங்களுக்கு இடம்பெயராமல் அந்தந்த கிராமங்களிலேயே தங்களுக்கான வாழ்வாதாரத்தைப் பெற வைப் பதுதான் எங்களுடைய இந்த ‘கனவு கிராமம்’ திட்டத்தின் நோக்கம்.’’

இவ்வாறு அவர் கூறினார்.