மம்தாவுக்கு தான் நாங்கள் எதிரி; வங்க மொழி பேசுபவர்களுக்கு அல்ல: அமித் ஷா ஆவேச பேச்சு

0
0

வங்க மொழி பேசும் மக்களுக்கு நாங்கள் எதிரியல்ல, அதேசமயம் மம்தா பானர்ஜிக்கும், திரிணாமுல் காங்கிரஸூக்கும் நாங்கள் எதிரிகள் என பாஜக தலைவர் அமித் ஷா கூறினார்.

மேற்குவங்க மாநிலத்தில் பாஜகவை பலப்படுத்தும் நோக்கத்துடன் பல்வேறு போராட்டங்களையும், பேரணிகளையும் பாஜக நடத்தி வருகிறது. வரும் மக்களவை தேர்தலில் மேற்குவங்கத்தில் கணிசமான இடங்களை வெல்லும் வகையில் பாஜக தலைவர் அமித் ஷா இங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அசாம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு, வங்க மொழி பேசும் மக்களுக்கு எதிரானது எனக் கூறி மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த விவகாரத்தில் நாட்டில் ரத்த ஆறு ஓடும் வகையில் பாஜக செயல்படுவதாக அவர் விமர்சித்துள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பேசியதாவது:

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ள வங்தேசத்தவர்களை கணக்கெடுக்கும் பணியை அசாம் செய்து வருகிறது. அவர்களால் இந்தியாவில் பாதிப்புகள் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கை தேவை என பாஜக வலியுறுத்துகிறது. ஆனால் இதனை வங்க மொழி பேசும் மக்களுக்கு எதிராக மம்தா பானர்ஜி திசை திருப்புகிறார்.

வங்கதேசத்தில் இருந்து ஊடுருபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்பு மம்தா பானர்ஜி பேசினார். ஆனால் இப்போது வாய் திறக்க மறுக்கிறார். பாஜக வாக்கு வங்கி அரசியல் நடத்தவில்லை. இந்த பிரச்சினையை வைத்து காங்கிரஸ் கட்சி அரசியல் செய்கிறது. நாங்கள் வங்க மொழி பேசுபவர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. மம்தா பானர்ஜிக்கு தான் எதிரிகள்’’ எனக் கூறினார்.

அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் போராட்டம் நடத்தி வருகிறது. ‘அமித் ஷா வெளியேறு’ என்ற முழுக்கத்துடன் அவர்களும் போட்டிக்கு பேனர்களும், விளம்பரங்களும் செய்துள்ளனர்.