மத்திய அரசு ஒத்துழைப்பு தராவிட்டாலும் வளர்ச்சி பணிகளுக்கு எந்தவித தடங்கலும் வராது: ஆந்திர முதல்வர் சந்திரபாபு திட்டவட்டம்

0
0

மத்திய அரசு ஒத்துழைப்பு தராவிட்டாலும், ஆந்திர மாநில வளர்ச்சி பணிகளில் எந்தவித தடங்கலும் ஏற்படாது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.

விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில், 3 லட்சம் ஏழைகளுக்கு அரசு கட்டி தந்த வீடுகளுக்கு கிரக பிரவேச நிகழ்ச்சி நடந்தது. இதில், ஃபைபர் கிரேட் முறையில், விஜயவாடாவில் இருந்தபடி, மாநிலத்தின் பல பகுதிகளில் நடைபெற்ற கிரக பிரவேச நிகழ்ச்சிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு காணொலி மூலம் பார்வையிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:

ஆந்திராவில் உள்ள ஏழைகள் அனைவருக்கும் சொந்த வீடு கட்டி தருவதே இந்த அரசின் லட்சியம். ஒரே சமயத்தில் 3 லட்சம் வீடுகளுக்கு கிரக பிரவேசம் செய்த ஒரே அரசு நம்முடைய அரசுதான். மேலும் 5 லட்சம் வீடுகள் ஏழைகளுக்கு கட்டி தரப்படும். விசாகப்பட்டினத்தில் மட்டும் ரூ.10,600 கோடி மதிப்புள்ள வீட்டு மனைகள் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டிய அவசியமில்லை என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது நம்பிக்கை துரோக செயலாகும். இதனை எதிர்த்து பதில் மனு ஆந்திரா சார்பில் தாக்கல் செய்யப்படும். மக்கள் வரிப்பணத்தில் இயங்கி வரும் மத்திய அரசு, ஆந்திர மக்கள் கட்டிய வரிப்பணத்தில் இந்த மாநிலத்திற்கு எந்தவொரு நிதியும் வழங்கவில்லை. மத்திய அரசு ஆந்திராவிற்கு ஒத்துழைப்பு தராவிட்டாலும், வளர்ச்சி பணிகளில் எந்தவித தடங்கலும் வராமல் நான் பார்த்து கொள்கிறேன். இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.