மத்திய அரசின் நிதி உ.பி.யில் 119, மகாராஷ்டிராவில் 56, ராஜஸ்தானில் 50 சதவீதம் உயர்வு; தமிழகத்துக்கு 3 சதவிகிதம் குறைவு: மக்களவையில் அதிமுக எம்.பி. தகவல்

0
0

கடந்த வருடம் மத்திய அரசின் நிதி உ.பி.க்கு 119, மகாராஷ்டிராவிற்கு 56 மற்றும் ராஜஸ்தானுக்கு 50 சதவீதம் உயர்ந்துள்ளது. இது தமிழகத்திற்கு 3 சதவிகிதம் குறைக்கப்பட்டதை உயர்த்தித்தர மக்களவையில் அதிமுக கோரிக்கை வைத்தது.

நேற்றுடன் முடிந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவயில் அதிமுக அவைத்தலைவர் டாக்டர்.பி.வேணுகோபால் பேசினார். பூஜ்ஜிய நேரத்தில் அவர் மத்திய அரசிடம் தமிழகத்தின் 2017-18 ஆம் ஆண்டிற்கான நிதியை உயர்த்த கோரிக்கை வைத்தார். அப்போது அவர் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கடந்த 2016-17 ஆம் ஆண்டை விட 2017-18-ல் மத்திய அரசு பாதியைவிட அதிகமாக உயர்த்தியுள்ள நிதித்தொகையை குறிப்பிட்டு அதிர வைத்தார்.

இது குறித்து திருவள்ளூர் தொகுதி எம்.பி.யான வேணுகோபால் குறிப்பிடுகையில், ‘உ.பி.க்கு கடந்த வருடம் ரூ.32,537 கோடியாக இருந்த தொகை ரூ.71,161 கோடி என உயர்த்தப்பட்டுள்ளது. இது 119 சதவிகித உயர்வு ஆகும். ராஜஸ்தானுக்கு ரூ.19,482 கோடி என்றிருந்தது ரூ.29,188 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மகாராஷ்ராவில் ரூ.21,652 கோடியில் இருந்து ரூ.33,752 கோடியாக உயர்ந்துள்ளது’ எனத் தெரிவித்தார்.

மத்திய அரசு பின்பற்றும் தமிழகத் திட்டங்கள்

தமிழகத்தில் அமலாக்கப்படும் பல முன்னுதாரண திட்டங்கள் மாபெரும் வெற்றி அடைவதாகக் குறிப்பிட்ட வேணுகோபால் அவற்றை வேறுபல மாநிலங்களும் பின்பற்றுவதாகச் சுட்டிக் காட்டினார். இவற்றில் சிலவற்றை தாமும் ஏற்க இருப்பதாக கடந்த வாரம் மக்களவையில் மத்திய அமைச்சர் வெளிப்படுத்தி இருந்ததாகவும் அவர் தன் உரையில் நினைவூட்டினார். தமிழகத்திற்கு குறைக்கப்பட்ட நிதியால் ஏற்படும் பிரச்சினைகளையும் வேணுகோபால் விளக்கினார்.

மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்

இது குறித்து வேணுகோபால் தனது உரையில் கூறும்போது, ‘தொடர்ந்து மத்திய அரசு குறைத்துவரும் நிதியால், மக்கள்நலத்திட்டங்கள் நலிவடைந்து வருகின்றன. ஏழைகள் பாதிக்கப்படுவதுடன் அவர்களைச் சமாளிக்க தமிழக அரசு திணறி வருகிறது. இதைக் குறிப்பிட்டு தமிழக முதல்வர் தொடர்ந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் பலனில்லை.’ எனத் தெரிவித்தார்.

சிறந்த மாநிலங்களுக்கு தண்டனை

தமிழகத்திற்கு கடந்த நிதியாண்டில் கிடைத்த ரூ.19,838 கோடி நடப்பு ஆண்டில் ரூ.19,264 கோடியாகக் குறைக்கப்பட்டு விட்டது. ரூ.574 கோடி குறைந்ததன் மதிப்பு மூன்று சதவிகிதம் ஆகும். இதை சுட்டிக்காட்டிய வேணுகோபால், சிறந்து விளங்கும் மாநிலங்களை மத்திய அரசு தண்டித்து வருவதாகத் தெரிவித்தார்.

கேள்விக்குறியான கூட்டமைப்பு தன்மை

இதனால், நம் நாட்டின் கூட்டமைப்பு தன்மை கேள்விக்குறியதாகி இருப்பதாகவும், சமூகநலத் திட்டங்களை அமலாக்க, போதுமான நிதியை மத்திய அரசு அளிக்க வேண்டும் எனவும் அதிமுக அவைத்தலைவர் வேணுகோபால் மக்களவையில் கோரினார்.