மத்தியஸ்த சபை உறுப்பினர் நியமனத்தில் மாநில அரசுகளை கலந்தாலோசிக்க வேண்டும் – மக்களவையில் அதிமுக கோரிக்கை

0
1

இந்திய மத்தியஸ்த சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும்போது, மாநில அரசுகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என மக்களவையில் அதிமுக கோரியுள்ளது.

இதுகுறித்து மக்களவையில் அதிமுக எம்.பி அன்வர் ராஜா பேசியதாவது:

கடந்த 1996-ம் ஆண்டின் மத்தியஸ்தம் மற்றும் சமரசப் பேச்சுவார்த்தை சட்டத்தை இந்த மசோதா திருத்த முனைகிறது. உள்நாட்டு மற்றும் சர்வதேச மத்தியஸ்தத்தை கொண்டுவருவது பற்றிய அம்சங்களை இந்த சட்டம் வரையறுக்கிறது.

இந்த அமைப்பிற்கு ஒரு தலைவர் இருப்பார். அவர் உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ, உயர்நீதிமன்ற நீதிபதியாகவோ, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகவோ, மத்தியஸ்தம் பற்றிய நடவடிக்கைகளில் நிபுணத்துவ அறிவு கொண்ட முக்கிய நபராகவோ அவர் இருக்கவேண்டும்.

மத்தியஸ்தம் துறையில் அனுபவம் பெற்ற கல்வித்துறை நிபுணர், உள்ளிட்ட அரசு சார்பில் இந்த சபையில் நியமன உறுப்பினர்கள் அங்கம் வகிப்பார்கள். இந்த சபைக்கு உறுப்பினர்களை நியமிக்கும் முன் மாநில அரசுகளை கலந்தாலோசிப்பது மிக அவசியமாகும்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்த இந்திய மத்தியஸ்த சபையில் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டியது வரவேற்கத்தக்க யோசனை. சர்வதேச வர்த்தக மத்தியஸ்தத்தில், உச்சநீதிமன்ற நியமிக்கும் நிறுவனம் மூலமாக நியமனங்கள் அமையும். பாரபட்சமின்றி ஒரு தரப்பு சார்பாக செயல்படும் தன்மையின்றி இந்த நியமனங்கள் அமைவதை உறுதி செய்யவேண்டும்.

உள்நாட்டு மத்தியஸ்தத்தில் தொடர்புடைய மாநிலங்களில் உயர்நீதிமன்றங்கள் நியமனம் செய்யும் நிறுவனங்கள் மூலமாக நியமனங்கள் மேற்கொள்ளப்படும். அத்தகைய நிறுவனம் களங்கமற்ற செயல்பாட்டைக் கொண்டிருக்கவேண்டும்.

30 நாட்களுக்குள் தீர்வு

மத்தியஸ்த நிறுவனங்கள் இல்லாத நிலையில் தொடர்புடைய உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இத்தகைய நிறுவனங்களின் பங்குபணியை செய்யக்கூடிய வகையில் மத்தியஸ்தர்கள் குழுவை பராமரிக்கலாம். மத்தியஸ்தரை நியமனம் செய்வது குறித்த விண்ணப்பத்தின் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். இதனால் மத்தியஸ்தர் நியமனத்தில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கலாம் என்பது வரவேற்கத்தக்கதாகும்.

ரகசியம் காக்கும் மசோதா

மத்தியஸ்த நடைமுறைகளை ரகசியமாக வைத்திருக்கவும், சில சூழ்நிலைகளில் தீர்ப்பு பற்றிய விவரங்களை மட்டும் வெளியிடவும் இந்த மசோதா வகை செய்கிறது. அமல்படுத்த தேவையிருக்கும் பட்சத்தில் மட்டுமே தீர்ப்பின் விவரங்கள் வெளியிடப்படும்.

2015 ஆம் ஆண்டு் அக்டோபர் 23 ஆம் தேதி மற்றும் அதற்குப் பிறகு துவங்கப்பட்ட மத்தியஸ்த நடவடிக்கைகளுக்கு மட்டுமே 2015 ஆம் ஆண்டின் சட்டம் பொருந்தும் என்று இந்த மசோதா தெளிவுபடுத்துகிறது.

ஒவ்வொரு நாளும் ஆன்லைன் மூலமாக எண்ணிக்கையில் அடங்காத வகையில் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவோர் ஒப்பந்தங்களை மேற்கொள்கின்றனர். இந்த மின்னணு வர்த்தகம் தொடர்பாக பிரச்சனைகள் எழும்போது இந்தியா முழுவதிலும் உள்ள பொருள் அல்லது சேவையை பயன்படுத்திய தரப்பினர் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழக்காடி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டிய நிலை உள்ளது.

ஆன்லைன் பரிவர்த்தனை

எளிதாக மற்றும் விரைவாக மேற்கொள்ளப்படும் ஆன்லைன் பரிவர்த்தனை பிரச்சனைகளுக்கு எளிதான மற்றும் விரைவான முறையில் தீர்வு காணும் நடைமுறை பற்றிய அம்சங்களை அரசு இந்த மசோதாவில் சேர்க்கவேண்டும்.

ஆன்லைன் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்காக சிக்கல் தீர்க்கும் நடைமுறையை எளிதான விரைவான அதிக செலவுபிடிக்காத முறையில் நடைமுறைப்படுத்த அரசு சில அம்சங்களை இந்த மசோதாவில் இணைக்கவேண்டும்.

இவ்வாறு அன்வர் ராஜா பேசினார்.