மதுரை விமான நிலையத்தில் இ-விசா சேவை: மத்திய உள்துறை அமைச்சருக்கு பொன்.ராதாகிருஷ்ணன் கடிதம்

0
11

இ-சேவை செயல்படுத்தப்படும் விமான நிலையங்களுடன் மதுரை விமான நிலையத்தையும் சேர்க்க வேண்டி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு மத்திய நிதி, கப்பல் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”இந்தியா முழுவதும் 25 விமான நிலையங்கள் இ-விசா சேவை செயல்படுத்தும் முனையமாக அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் சென்னை, திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களில் இந்த இ-விசா சேவை முனையம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் பன்னாட்டு விமான முனையமாக செயல்பட்டு வரும் மதுரையில் இ-விசா சேவை நடைமுறையில் இல்லை.

வெளிநாடுகளில் இருந்து மதுரைக்கு வரும் சுற்றுலா பயணிகள், மருத்துவ சேவை, வியாபாரம் தொடர்பாக வரும் பயணிகள் இ-சேவை கிடைக்காமல் சிரமத்துக்கு உள்ளாவதை அறிந்து இ-சேவை செயல்படுத்தப்படும் 25 விமான நிலையங்களுடன் மதுரை விமான நிலையத்தையும் சேர்த்து செயல்படுத்த அனுமதியளிக்க வேண்டி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளேன். மதுரை விமான நிலையம் விரைவில் இ- விசா சேவையை செயல்படுத்தும் முனையமாக சேர்க்கப்படும் என ராஜ்நாத் சிங் நம்பிக்கை அளித்துள்ளார்” என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.