மதுரை தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ கட்டுமான நிறுவனப் பொறியாளர்கள் ஆய்வு

0
0

மதுரை அருகே தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் மத்திய அரசின் கட்டுமான நிறுவன பொறியாளர்கள் குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

கன்னியாகுமரி – பெங்களூரு நான்கு வழிச் சாலையில் மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 200 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடத்துக்கு நான்குவழிச் சாலை இணைப்பு சாலைகள், குடிநீர் வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன. மற்றொரு புறம் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கான நிதி ஒதுக்கீடு, அதற்கான கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர் விடும் பணிகளும் நடக்கின்றன.

இந்நிலையில் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற எச்எல்எல் (HLL) ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை கட்டுமான நிறுவனப் பொறியாளர் குழு, அதன் பொதுமேலாளர் ரஞ்சித்குமார் (திருவனந்தபுரம்) தலைமையில் தோப்பூரில் ‘எய்ம்ஸ்’க்காக ஒதுக்கப்பட்ட 200 ஏக்கர் நிலத்தை ஆய்வு செய்தனர். இந்தக் குழுவில் பொறியாளர்கள் அனிதா ஸ்ரீகுமார் (திருவனந்தபுரம்), ஸ்ரீலதா (திருவனந்தபுரம்), மேலாளர் ஸ்ரீகுமார் (சென்னை), துணை மேலாளர் பத்ராசலம் (சென்னை), இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் அதிகாரி சீனிவாசன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அவர்களுடன் அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் மருதுபாண்டியன் மற்றும் வருவாய்த்துறை, வேளாண் துறை அதிகாரிகள் உடன் சென்றனர்.

‘எய்ம்ஸ்’ கட்டுமான நிறுவன பொறியாளர் குழுவினர், தோப்பூரில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் கட்டுமானப் பணிகளை எப்படி தொடங்கலாம், கட்டுமானப் பொருட்களை எந்த வழியாக இந்த இடத்துக்கு கொண்டு வரலாம், எந்த அமைப்பில் ‘எய்ம்ஸ்’ கட்டிடத்தை கட்டலாம் என்பது குறித்து ஆய்வு செய்தனர். அதன்பிறகு, இந்தக் குழுவினர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் கொ. வீரராகவராவுடன் ஆலோசனை நடத்தினர்.