மதுரை அருகே 47 மயில்கள் விஷம் வைத்துக் கொலை

0
0

மதுரை அருகே மருதங்குளத்தில் கண்மாய் கால்வாய்களில் 47 மயில்கள் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டு கிடந்தன. இப்பகுதியில் மயில்கள் தொடர்ந்து வேட்டையாடப்படுவதுடன், பயிர்களை நாசம் செய்வதாக சொல்லி விஷம் வைத்து கொல்லப்படுவதால் மயில்கள் இனம் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் மயில்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. அழகர் கோயில், சோழவந்தான், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி, திருமங்கலம், அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் மயில்கள் நடமாட்டம் மிக அதிகம். இதுதவிர நகரப்பகுதியில் உள்ள கண்மாய்கள், கால்வாய்கள், வயல்வெளிகளுக்கும் இரைத்தேடி வந்து செல்கின்றன.

நிரந்தரமாக நகர்பகுதி கண்மாய்களில் தங்கவும் செய்கின்றன. முருகனின் வாகனம் மயில் என்பதாலோ என்னவோ கடந்த காலத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் மயில்கள் எண்ணிக்கை மாவட்டத்திலே அதிகமாக இருந்தன. இங்கு பச்சை, நீலம் மற்றும் அபூர்வ வகை வெள்ளை நிற மயில்கள் இருந்தன.

கடந்த 10 ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் மலைப்பகுதி சூழலியல் அந்தஸ்தை இழந்துவிட்டதால் அங்கு மயில்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டன. வெள்ளை நிற மயில்கள் அபூர்வமாகிவிட்டன. மாவட்டத்தின் மற்ற இடங்களிலும் சாதாரணமாக நடமாடிய மயில்கள் தற்போது அபூர்வமாகி வருகின்றன. மாவட்டத்தில் மயில்கள் வேட்டைக்காகவும், பொழுதுப்போக்குக்காகவும், வயல்களில் பயிர்களை நாசம்செய்வதாக விஷம் வைத்தும் மயில்கள் அதிகளவு கொல்லப்படுகின்றன.

வனத்துறை அதை தடுக்க முன்வர ஆர்வம் காட்டவில்லை என வன உயிரின ஆர்வலர்கள் ஆதங்கம் அடைந்துள்ளனர். சமீபத்தில் கூட, மதுரை மாவட்டம் தேனூர் கண்மாயில் காங்கா மடையருகே ஒரே நாளில் 12 பெண் மயில்கள் விஷம் வைத்து கொல்லப்பப்பட்டன. மேலும், அவ்வப்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக மயில்கள் வயல்களில் வைக்கப்படும் பயிர்களை காக்க தூவப்பட்ட பூச்சி மருந்துகளை தவறுதலாக சாப்பிட்டும், திட்டமிட்டும் விஷம் வைத்தும் கொல்லப்படுகின்றன.

கடந்த வாரம் மதுரை நகரின் மையமான ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ரைபிள் கிளப் அருகே உள்ள குப்பை தொட்டியில் பெண் மயில் ஒன்று இறந்து கிடந்தது. வனத்துறை அலுவலகம் அருகேயே மயில் ஒன்று இறந்து கிடந்தது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்நிலையில், மதுரை அருகே அழகர் சாலையில் உள்ள மருதங்குளம் பகுதியில் சனிக்கிழமை காலை உத்தங்குடி கண்மாய்க்கு செல்லும் கால்வாய், தென்னந்தோப்பு, கருவேலம் மரக்காடுகளில் மயில்கள் இறந்து கிடந்தன.

அப்பகுதியில் உள்ள கோல்டன் சிட்டி குடியிருப்பு பகுதி வழிப்பாதையில் ஆரம்பித்து வழிநெடுக கொத்துக் கொத்தாக மயில்கள் இறந்து கிடந்தன. அப்பகுதியை சேர்ந்த மக்களை அதிர்ச்சியடைய வைத்தது. அவர்கள் உடனே மதுரை கே.புதூர் போலீஸ் நிலையத்திற்கும், மதுரை வனத்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். வனத்துறை ரேஞ்சர் ஆறுமுகம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

 

அவர்கள் இறந்து கிடந்த மயில்களை எடுத்து பிரேதப் பரிசோதனைக்காக மதுரை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் மதியம் 12 மணி நிலவரப்படி இறந்து கிடந்த 47 மயில்களை மீட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் இறந்து கிடக்கும் மயில்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இறந்து கிடந்த மயில்கள் அருகே விஷம் கலக்கப்பட்டிருந்த நெற்கதிர்கள் சிதறிக் கிடந்தன. யாரோ மர்ம நபர்கள் நெற்கதிர்களில் திட்டமிட்டே விஷத்தை கலந்து மயில்கள் சாகடிக்க சதி செய்துள்ளது வனத்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ரேஞ்சர் ஆறுமுகம்

 

ரேஞ்சர் ஆறுமுகம் கூறுகையில், “மயில்கள் இறந்து கிடந்த பகுதியில் வயல்வெளிகளில் தற்போது நெல் சாகுபடி செய்துள்ளனர். அவர்கள் மயில்கள் வந்து பயிர்களை நாசம் செய்யும் என்பதால் விஷத்தை வைத்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். ஆனால், அதுவும் உறுதியான தகவலாக இல்லை.

மயில்கள் தேசியப்பறவை என்பதால் அவை வனப்பாதுகாப்பு சட்டம் பட்டியல்-1 சேர்ந்தவை. அதை விஷம் வைத்து கொன்றவர்கள் உடனே கைது செய்யப்படுவார்கள். 7 ஆண்டுகள் வரை அவர்களுக்கு சிறை தண்டனை கிடைக்கும். மாவட்டத்தில் மயில்கள் இறப்பை தடுக்க மண்டல வன பாதுகாப்பு அலுவலர், மாவட்ட வன அலுவலருடன் ஆலோசித்து சிறப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

மருதங்குளத்தை சேர்ந்த ராஜா என்பவர் கூறுகையில், “எங்கள் பகுதியில் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட மயில்கள் இரைத்தேடி வரும். அவற்றை எங்கள் பிள்ளைப்போல் பார்த்துக் கொள்வோம். தினமும் அவற்றுக்கு ரேஷன் அரிசி, சாப்பாடுக்கு வைத்திருக்கும் வீட்டு அரிசிகளை கூட அதற்கு போடுவோம்.

மயில்கள், புறாக்கள் வந்து அவற்றை சாப்பிட்டு செல்லும். நேற்றும், இன்று காலையும் வழக்கமாக வரும் மயில்களை காணவில்லையே என்று அப்பகுதியில் உள்ள கால்வாய்களுக்கு சென்று பார்த்தோம். அங்கு மயில்கள் இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளோம். மயில்களை இப்படி சாகடிப்பதற்கு எப்படி மனசு வந்ததோ தெரியவில்லை” என்றார்.