மங்களூரு அருகே குழந்தை கடத்துபவர் என நினைத்து மகனின் கண்முன் தந்தைக்கு தர்ம அடி கொடுத்த கும்பல்

0
0

கர்நாடக மாநிலம், மங்களூரு அருகே மகனுடன் ஆட்டோவில் சென்ற தந்தையை குழந்தை கடத்துபவர் என நினைத்து மக்கள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.

மங்களூரு அருகே உஜ்ரே நகரைச் சேர்ந்தவர் காலித் (வயது 30). இவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். கடந்த வியாழக்கிழமை தனது 2 வயது மகனை அழைத்துக் கொண்டு ஆட்டோவில் சென்றார். தந்தையின் சொல்படி கேட்காமல், சிறுவன் அடம்பிடித்ததால், அந்தச் சிறுவனை அடித்து ஆட்டோவில் அமரவைத்து காலித் ஓட்டியுள்ளார்.

இதை ஆட்டோவின் பின்னால் பைக்கில் வந்த இருவர் குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டதைக் கவனித்தனர். காலித் குழந்தையை கடத்திச் செல்கிறார் எனத் தவறாக நினைத்து, ஆட்டோவைப் பின்தொடர்ந்தனர். ஒரு டீக்கடையில் காலித் தனது ஆட்டோவை நிறுத்தி டீ குடிக்க இறங்கியபோது, பைக்கில் வந்த இருவரும் காலித்திடம் குழந்தை குறித்த விவரத்தைக் கேட்டுள்ளனர்.

ஆனால், காலித் லேசாக மது அருந்தி இருந்ததால், அவர்களின் கேள்விக்கு சிறிது தயங்கி பதில் அளித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த பைக்கில் வந்த இரு இளைஞர்களும், காலித் குழந்தையை கடத்திச் செல்கிறார் என நினைத்து, அவரைத் தாக்கியுள்ளனர்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்களும் என்ன விவரம் எனக் கேட்டபோது, குழந்தையைக் கடத்திச் செல்கிறார் எனக் கூறியதால், காலித்துக்கு மக்கள் தர்ம அடி கொடுத்தனர். ஆனால், அது தனது மகன் என காலித் மன்றாடியும் மக்கள் அடிப்பதை நிறுத்தவில்லை.

சாலையில் கூடியிருந்த கூட்டம்

 

இதையடுத்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் வந்தனர். அவர்கள் வந்து காலித்திடம் விசாரித்த போது, தனது மகனை அழைத்துக்கொண்டுச் சென்றபோது, குழந்தை கடத்துபவர் என நினைத்து மக்கள் அடித்தனர் என அழுது கொண்டே தெரிவித்தார்.

காலித்தை யார் அடித்தது என போலீஸார் விசாரித்த போது, அப்பகுதி மக்கள் ஒருவர் கூட முன்வரவில்லை. இதனால், காலித்தை காவல் நிலையத்துக்கு போலீஸ் அழைத்துச் சென்றனர். காலித்தின் மனைவியை அழைத்துவந்து, அவரிடமும் விசாரிக்கப்பட்டது. அவரும் காலித் தனது கணவர் என்றும், தன்னிடம் சண்டையிட்டு குழந்தையைத் தூக்கிக்கொண்டு வந்தார் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, காலித்தை போலீஸார் விடுவித்தனர். அவரிடம் உன்னைத் தாக்கியவர்கள் குறித்து புகார் கொடுக்கப் போகிறீர்களா எனக் கேட்டபோது, தன்னைத் தாக்கியவர்கள் யாரென்றே தெரியாது எனத் தெரிவித்து புகார் கொடுக்க மறுத்துவிட்டார்.

வாட்ஸ் அப் மூலம் பரப்பி விடப்படும் வதந்திகளை நம்பி அப்பாவி மக்களைக் கும்பல் தாக்கும் சம்பவங்கள் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகிறது. இதுவரை, 20-க்கும் மேற்பட்டோர் இதுபோன்ற தாக்குதலில் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.