மக்களவை தேர்தலுக்கு பின்பே எதிரணியின் பிரதமர் வேட்பாளர் முடிவு: கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைக்க காங்கிரஸ் புதிய வியூகம்

0
0

2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் இலக்குடன் செயல்பட்டு வரும் காங்கிரஸ், பிரதமர் வேட்பாளர் பற்றி தேர்தலுக்கு பிறகு முடிவு செய்துகொள்ள தீர்மானித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைத்து எதிர்கட்சிகளையும் ஓரணியின் கீழ் திரட்டுவதற்காக இந்த வியூகத்தை வகுத்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகையில் ‘‘எதிர்கட்சிகள் சார்பில் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படுபவர் யார் என்பதை பற்றி இப்போதைக்கு பேசப்போவதில்லை. அதற்கான தேவை ஏற்படும்போது தலைவர்கள் கூடி முடிவு செய்வார்கள். ஒரே சிந்தனையுள்ள கட்சிகளை ஒரணியில் திரட்டுவதே தற்போதைய இலக்கு. இதில் குழப்பம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதே எங்கள் நோக்கம். எனவே பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தலுக்கு பிறகே முடிவு செய்வது பற்றி பரிசீலித்து வருகிறோம்’’ என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமராக கூடும் என அவரது கட்சியினர் ஏற்கெனவே கூறி வருகின்றனர். அதுபோவே உத்தப் பிரதேசத்தில் மெகா கூட்டணி பெரும் வெற்றி பெற்றால் பிரதமர் பதவியில் அமர மாயாவதியும் விரும்புகிறார். எனவே இந்த சூழலில் பிரதமர் பதவி பற்றிய சர்ச்சையை எழுப்பாமல் இருக்கவே காங்கிரஸ் விரும்புகிறது.

காங்கிரஸை பொறுத்தவரை மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸூடனும், பிஹாரில் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளத்துடனும் கூட்டணியை உறுதி செய்துள்ளது. அதேசமயம் மிக முக்கியமான மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை முழுமையாக முடிவடையவில்லை. தொகுதிகள் தொடர்பான பிரச்சினையே இழுபறிக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், ஹரியாணா போன்ற மாநிலங்களில் பாஜகவை நேருக்கு நேர் சந்திக்கவுள்ள காங்கிரஸ், இந்தமுறை கணிசமான வெற்றி கிடைக்கும் என நம்புகிறது. அதேசமயம் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி உண்டா என்பது பற்றி அந்தந்த மாநில காங்கிரஸ் தலைமை முடிவுக்கு வரவில்லை.

2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 230 இடங்களுக்கு மேல் பாஜக வெற்றி பெறாது எனவும், அதுபோன்ற நிலை வந்தால், அதன் கூட்டணிக் கட்சிகளே கூட, நரேந்திர மோடி பிரதமராக எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் எனவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸை பொறுத்தவரை தற்போதைய நிலையில் விவசாயிகள் பிரச்சினை, பொருளாதார சரிவு, வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி மக்களிடம் பிரச்சாரம் செய்ய காங்கிரஸ் தலைமை திட்டமிட்டு வருகிறது.