மக்களவை தேர்தலில் பாஜகவுடன் பிஜு ஜனதா தளம் ரகசிய ஒப்பந்தம் – காங்கிரஸ் புகார்

0
0

வரும் மக்களவை தேர்தலில் பாஜகவுடன் பிஜு ஜனதா தளம்(பிஜேடி) ரகசிய ஒப்பந்தம் செய்து இருப்பதாக காங்கிரஸ் புகார் கூறியுள்ளது. அரசியல் லாபத்திற்காக மோதல் இருப்பதுபோன்று பிஜு ஜனதாதளம் காட்டிக் கொள்வதாக ஒடிஸா மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஒடிஸாவில் ஆளும் பிஜேடியின் தலைவரான நவீன் பட்நாயக் (71) நான்காவது முறை முதல் அமைச்சராக உள்ளார். இப்பதவியை முதன்முதலாக 2000 ஆண்டில் ஏற்கும் முன் நவீன், மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தவர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் உறுப்பினராக பிஜேடி 1998 முதல் 2009 ஆம் ஆண்டு வரை இருந்தது. ஒடிஸாவில் பிஜேடி ஆட்சிக்கு பாஜக 2000 முதல் 2009 வரை 9 ஆண்டுகள் ஆதரவளித்திருந்தது. 2009 சட்டப்பேரவை தேர்தலில் அதற்கு தனிமெஜாரிட்டி கிடைத்ததால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிஜேடி வெளியேறியது. அதன் பிறகு ஒடிஸாவில் காங்கிரஸுடன் சேர்த்து பாஜகவும் எதிர்கட்சியானது.

ஜிஎஸ்டி ஆதரவு

இந்நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஆளும் மத்திய அரசிற்கு, பிஜேடி முக்கிய சமயங்களில் ஆதரவளித்து வருகிறது. பிஜேடிக்கு நாடாளுமன்ற மக்களவையில் 19 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 9 பேரும் உள்ளனர். இவர்கள், முதன்முறையாக ஜிஎஸ்டியில் மத்திய அரசிற்கு ஆதரவளித்தனர்.

ரகசிய ஒப்பந்தம்

அதன் பிறகு மத்திய அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை புறக்கணித்தது. இந்த புறக்கணிப்பால் மத்திய அரசு பெரும் உதவி பெற்றது. கடைசியாக மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் ஆளும் கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாரயண் சிங்கிற்கு வாக்களித்து பிஜேடி வெற்றி பெறச் செய்தது. இதனால், பாஜகவுடன் மக்களவை தேர்தலுக்காக பிஜேடி ரகசிய ஒப்பந்தம் செய்திருப்பதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ’இந்து தமிழ்’ இணையதளத்திடம் ஒடிஸா மாநில காங்கிரஸ் தலைவரான நிரஞ்சன் பட்நாயக் கூறும்போது, ‘‘மக்கள் முன் பாஜகவுடன் மோதல் இருப்பதாகப் பொய் கூறி விட்டு பிஜேடி நாடகமாடுகிறது. தொடர்ந்து அது பாஜகவிற்கு மத்தியில் ஆதரவு அளித்து வருகிறது. இவர்கள் தொடங்கியுள்ள ‘மிஷன் 120’ என்பது உண்மையில் ‘மிஷன் 420’ ஆகும்.’’ எனத் தெரிவித்தார்.

மும்முனைப்போட்டி

அடுத்த ஆண்டு 2019 மக்களவையுடன் சேர்த்து ஒடிஸா மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில், பாஜகவின் செல்வாக்கு கடந்த தேர்தலை விட சற்று கூடியிருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே, 2019 தேர்தல்களில் பிஜேடி, பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இடையே மும்முனைப்போட்டி நிலவுகிறது.