மக்களவை, சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை வரவேற்கிறோம்; 2024-ல் வேண்டுமானால் அமலாக்கலாம் என அமைச்சர் டி.ஜெயக்குமார் கருத்து

0
0

மக்களவை, சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதை வரவேற்கிறோம். ஆனால், அதிமுக அரசுக்கு பதவிக்காலம் இருப்பதால் முன்கூட்டியே தேர் தல் நடத்தாமல் 2024-ல் நடத்தலாம் என்பதே எங்கள் நிலைப் பாடு என்று அமைச்சர் டி.ஜெயக் குமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கருத்தை தமிழக அரசு ஏற்றுக் கொள்கிறதா?

மத்திய சட்ட ஆணையத்தின் இன்றைய கூட்டத்தில், அதிமுக தலைமை நிர்வாகிகள் பங்கேற்று கருத்துகளை தெரிவிக்கின்றனர். ஏற்கெனவே கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நிலைப்பாடு அதை வரவேற்று ஏற்றுக் கொள்வதுதான். ஆனால், நமக்கு காலம் உள்ளது. 2021-ல் தான் பேரவை தேர்தல் வருகிறது. எனவே, முன்கூட்டியே தேர்தலை கொண்டுவரக்கூடாது. 2024-ல் இரு தேர்தலையும் நடத்தலாம் என்பதே எங்கள் நிலைப்பாடு.

இந்த முறையை கொண்டுவந்தால் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை ஏற்படுமே?

எங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளோம். அதன்பின் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளை பொறுத்து நாங்கள் எங்கள் கருத்துகளை தெரிவிப்போம். .

திருவண்ணாமலை ஆர்பாட்டத்தில் அரசை தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளாரே?

சட்டப்பேரவைக்கும் வருவதில்லை. வாய்திறந்தும் பேசுவதில்லை. வாய் மூடி சாமியாராக உள்ளார். அவரைப்பற்றி நாட்டு மக்களுக்கு தெரியும். என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் மக்கள் அவரை ஏற்க மாட்டார்கள். அவரது சொல் எடுபடாது.

‘சர்கார்’ திரைப்படத்தில் விஜய் புகைப்பிடிப்பதுபோன்ற காட்சி வந்ததற்கு பொது சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பிய தில் உள்நோக்கம் உள்ளதாக பேசப்படுகிறதே?

புகைப்பிடிப்பது உடல்நலத்துக்கு தீங்கானது என்று அரசின் சார்பில் தெளிவாக விளம்பரம் செய்யப்படுகிறது. புகைப்பழக்கத்தில் இருந்து விடுவிக்க அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இந்த நேரத்தில், நடிகர்கள், திரைத்துறையினர், இயக்குநர்கள் லாபத்துக்காக, சமுதாயம் என்ன ஆனால் என்ன என்று நினைக்க கூடாது. சமுதாயத்தை யும் பாதுகாக்க வேண்டும். தேவையில்லாத மது அருந்துதல், புகைப்பிடிக்கும் காட்சிகளை தவிர்க்க வேண்டும். நடிகர்கள் இதுபோன்ற காட்சிகளில் நடிப்பதை தவிர்த்தால் சமுதாயத்துக்கு நன்மை பயக்கும்.

பிளாஸ்டிக்கை தடை செய் வது போல சிகரெட்டையும் தடை செய்துவிடலாமே?

இது ஒரு மாநிலம் எடுக்கும் முடிவு இல்லை. மத்திய அரசு எடுக்க வேண்டிய முடிவு. அவர் கள் எடுத்தால் நிச்சயம் வரவேற்கலாம். இங்கு தடை செய்தால், ஆந்திரா, கேரளாவில் இருந்து சிகரெட், பீடி வரும். மத்திய அரசு முடிவெடுத்தால்தான் ஒழிக்க முடியும். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.