மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 50 கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்ற திட்டம்

0
0

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, வரும் பிப்ரவரி மாதத்துக்குள் நாடு முழுவதும் 50 பொதுக்கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மக்களவைத் தேர்தல் வரும் 2019-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் பாஜகதற்போதே ஈடுபடத் தொடங்கி

விட்டது. குறிப்பாக, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்தந்த மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு கட்சித் தொண்டர்களைத் தயார்படுத்தும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடியும் களத்தில் இறங்கவுள்ளதாக பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், வரும் பிப்ரவரி மாதத்துக்குள், நாடு முழுவதும் 50 பொதுக்கூட்டங்களில் பங்கேற்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மோடி பங்கேற்கும் ஒவ்வொரு பொதுக்கூட்டமும் இரண்டு அல்லது மூன்று மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அதன்படி, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, 100 மக்களவைத் தொகுதிகளில் பிரதமர் மோடி பேசிவிடுவார் என பாஜக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். அதேபோல், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி ஆகியோரும் பிப்ரவரி மாதத்துக்குள் தலா 50 பொதுக்

கூட்டங்களில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.