மக்களவைக்கும் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த அதிமுக, திமுக கட்சிகள் எதிர்ப்பு: சட்ட ஆணையத்தின் ஆலோசனை கூட்டத்தில் முடிவை தெரிவித்தன

0
0

மக்களவை, சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தக் கூடாது என சட்ட ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக, திமுக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஒரே நேரத்தில் தேர்தல் என்பது ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரானது என்று திமுக கூறியுள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் மக்களவைக்கும் மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்து வது தொடர்பாக அரசியல் கட்சி கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என கடந்த மாதம் சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. இந்த திட்டத்துக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தெலுங்குதேசம், திரிண மூல் ஆகிய கட்சிகள் ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளுடன் சட்ட ஆணையம் கடந்த 2 நாட்களாக டெல்லியில் ஆலோசனை நடத்தியது. நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் அதிமுக சார்பில் மக்களவை துணைத் தலைவரும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான மு.தம்பிதுரை, தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர். தமிழக சட்டப்பேரவையின் ஆயுட்காலம் வரும் 2021 வரை இருப்பதால் 2019 மக்களவை தேர்தலோடு சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்த அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது.

2024-ல் நடத்தலாம்

இது தொடர்பாக கரூரில் செய்தியாளர்களிடம் மு.தம்பிதுரை நேற்று கூறியதாவது:

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தலையும் சேர்த்து நடத்தக் கூடாது என சட்ட ஆணைய கூட்டத்தில் அதிமுக சார்பில் கருத்து தெரிவித்துள்ளோம். தேர்தல் சீரமைப்பு மேற்கொண்ட பிறகு 2024-ம் ஆண்டு தேர்தலில் வேண்டுமானால் இதை நடைமுறைப்படுத்தலாம். அப்போது மக்களவை, சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம்.

பொதுவாக இடைத்தேர்தல் கள் கூடாது என்பது எனது தனிப்பட்ட கருத்து. இதனால் பல்வேறு விரயங்கள் ஏற்படுகின்றன. தேர்தல்களில் பெரும்பாலும் கட்சிகளுக்குத்தான் மக்கள் வாக்களிக்கின்றனர். தனிநபர்களுக்கு அல்ல. எனவே, இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் தொகுதியில், அங்கு ஏற்கெனவே எந்தக் கட்சி வெற்றி பெற்றதோ அந்த கட்சியே மீதமுள்ள காலத்துக்கு பிரதிநிதியை நியமித்துக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும். இடைத்தேர்தல்க ளால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. எனவே மக்களவை, சட்டப்பேரவை, உள்ளாட்சி அமைப்புகளில் இடைத்தேர்தல்கள் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, டெல்லியில் நேற்று 2-வது நாளாக நடந்த சட்ட ஆணைய கூட்டத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா எம்பி கலந்துகொண்டார். மக்களவை, சட்டப்பேரவைக்கு ஒரே நேரத்தில் தேர் தல் நடத்துவதை திமுக எதிர்க்கிறது என்று அவர் தெரிவித்தார். பின்னர், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை சட்ட ஆணையத்தின் தலைவர் நீதிபதி பி.எஸ்.சவுகானிடம் அளித்தார். அந்த கடிதத் தில் கூறியிருப்பதாவது:

மக்களவைக்கும் சட்டப்பேரவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கும் ஜனநாயக நடைமுறைகளுக்கும் எதிரானது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக சுவீடன், பெல்ஜியம், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் உதாரணம் காட்டப்பட்டுள்ளன. ஆனால், சுவீடன் 1 கோடி, பெல்ஜியம் 1.1 கோடி, தென் ஆப்பிரிக்கா 5.5 கோடி மக்கள் தொகை கொண்டுள்ளன. இந்த நாடுகளின் மொத்த மக்கள் தொகையானது தமிழகத்தின் மக்கள்தொகையான 7.9 கோடியை விடக் குறைவு. எனவே, நம் நாட் டின் மக்கள் தொகையோடு (132 கோடி) இந்த நாடுகளின் மக்கள் தொகையை ஒப்பிடுவது ஏற்புடையதாக இருக்காது.

மேலும், ஒரே நேரத்தில் தேர் தல் நடத்தினால் செலவு குறை யும் என்பதும் தவறானது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மின் னனு வாக்குப்பதிவு இயந்திரங் கள் மற்றும் விவிபேட் இயந்திரங் கள் ஆகியவற்றை வாங்க மட்டும் ரூ.10 ஆயிரம் கோடி செலவாகும். இது 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் செலவாகும்.

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்கு அரசுக்கு ஆன மொத்த செலவே ரூ.3,870 கோடிதான். இந்த தொகையைவிட கூடுதலாக செலவு செய்வது எப்படி செலவு குறைப்பாகும். எனவே ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை எங்கள் கட்சி எதிர்க்கிறது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

9 கட்சிகள் எதிர்ப்பு

இதனிடையே மத்திய சட்ட ஆணையக் கூட்டம் நேற்று நிறைவு பெற்றது. இதில் அதிமுக, சிரோமணி அகாலி தளம், சமாஜ்வாதி, தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய 4 கட்சிகள் ஒரே நேரத்தில் நடத்த ஆதரவு தெரிவித்துள்ளன.

திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், பார்வர்டு பிளாக், ஐக்கிய ஜனதா தளம், கோவா பார்வர்டு ஆகிய 9 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பாஜக வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்தாலும் சட்ட ஆணையத்திடம் எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை. விரைவில் தனது நிலைப்பாட்டை ஆணையத்திடம் தெரிவிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நடைமுறைக்கு காங்கிரஸ் கட்சி பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எனினும் எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு தங்களது முடிவை அறிவிப்போம் என்று அறிவித்துளது.