மகாராஷ்டிர மாநிலத்தில் எதிர்க்கட்சி கூட்டணி தயார்: காங்கிரஸ் அணியில் சரத் பவார், மாயாவதி

0
1

மகாராஷ்டிராவில் எதிர்கட்சி களின் கூட்டணி ஏறக்குறைய தயாராகிவிட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்காக, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியுடன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப் பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், மகா ராஷ்டிராவின் 48 தொகுதிகளில் 23-இல் பாஜக வெற்றி பெற்றது. அதன் கூட்டணியான சிவசேனா வுக்கு 18 இடங்கள் கிடைத்தன. அதேபோல், தேசியவாத காங்கிரஸ் 4, காங்கிரஸ் 2 மற்றும் ஸ்வபிமானி பக்ஸா 1 என தொகுதிகளைக் கைப்பற்றின.

இந்நிலையில், எதிர்வரும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், ஆளும் பாஜகவை எதிர்கொள்ள மகாராஷ்டிராவில் வலுவான எதிர்க்கட்சி கூட்டணி இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சி கூட்டணியை தமது தலைமையில் அமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார் முயற்சித்தார். தற்போது அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

அதன்படி, தேசியவாத காங்கிரஸுடன் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஸ்வபிமானி பக்ஸா ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

மகாராஷ்டிராவில் யார் தலைமையில் எதிர்க்கட்சிக் கூட்டணி அமைவது என்பதில்தான் பிரச்சினை இருந்தது. இதில் தற்போது சுமூக முடிவு எட்டப்பட்டிருக்கிறது. அதன்படி, எதிர்வரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸுக்கு சம அளவில் தொகுதிகள் இருக்கும். அக்கட்சிகள் இரண்டும், தம்மிடம் இருக்கும் தொகுதிகளை பகுஜன் சமாஜுக்கு பகிர்ந்தளிப்பார்கள் என அவர்கள் தெரிவித்தனர்.