’மகாநதி’ திரைப்பட பாணியில் தெலங்கானாவில் சிறுமிகளை கடத்தி விபச்சார கும்பலுக்கு விற்பனை: அடையாளம் காண போலீஸ் நிலையத்திற்கு படை எடுக்கும் பெற்றோர்

0
0

தெலங்கானா மாநிலம், யாதாத்ரி பகுதியில், பல ஊர்களில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 வயது முதலான சிறுமிகளை விபச்சார வீடுகளில் இருந்து போலீஸார் மீட்டனர்.

தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த 3 முதல் 7 வயது வரையிலான சிறுமிகளை ஒரு கும்பல் கடத்தி தெலங்கானா மாநிலத்தில், யாதாத்ரி எனும் இடத்தில் உள்ள விபச்சார கும்பலிடம் விற்று வருகிறது. இந்தக் கும்பல் இந்த அப்பாவி சிறுமிகளுக்கு, ’ஹார்மோன்’ மருந்துகளை ஊசிகள் மூலம் போட்டு வந்துள்ளது.

யாதாத்ரி பகுதியில் கல்யாணி என்பவர் வசிக்கிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன் விபச்சார தொழிலில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இவரது வீட்டில் சில நாட்களாக ஒரு சிறுமியின் அழுகுரல் கேட்டதால், சந்தேகப்பட்ட அந்த ஊர்காரர்கள்  போலீஸ் நிலையத்திற்கு கடந்த மாதம் 31ம் தேதி ரகசிய தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் போலீஸார் கல்யாணியின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வீட்டில் 2 சிறுமி கள் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தியதில், பல உண்மைகள் வெளிவந்தன.

ஒரே சமயத்தில் கல்யாணியின் வீடு மட்டுமின்றி, அவரது உறவினர்கள், நண்பர்களது வீடுகளிலும் போலீஸார் சோதனையிட்டனர். இதில் 3 வயது முதல் 12 வயது வரை உள்ள சிறுமிகளை அறைகளில் அடைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இவர்கள் அனைவருக்கும் வலுக்கட்டாயமாக ‘ஹார்மோன்’ ஊசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

நர்ஸ் கைது

இதனால், குழந்தைகளின் உடல் வளர்ச்சி வழக்கத்தை விட அதிகமாக இருப்பதை அறிந்தனர். இது குறித்து விசாரணை நடத்தி, ஹார்மோன் ஊசி போட்ட ஒரு தனியார் நர்சிங் ஹோமையும் போலீஸார் சீல் வைத்துள்ளனர். இது தொடர்பாக ஒரு நர்ஸ் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் இவ்வழக்கு தொடர்பாக இதுவரை 15 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். கடத்தப்பட்டு வந்த சிறுமிகளை சில ஆண்டுகள் வரை வளர்த்து ஆளாக்கி, பின்னர் 13 அல்லது 14 வயது வந்த பின்னர் வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் அதிக விலைக்கு விற்க முடிவு செய்திருந்ததும் போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த தகவல்கள் தெலுங்கு ஊடகங்களில் வெளிவந்ததும், சிறு வயதில் தொலைந்து போன தங்களது மகள் இந்த கும்பலிடம் சிக்கி இருப்பாளோ எனும் சந்தேகத்தில் ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து சில பெற்றோர்கள் பதறி, துடித்து யாதாத்ரிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இவர்கள், தங்களது மகள் சிறு வயதில் இருந்த புகைப்படத்தை போலீஸாரிடம் காண்பித்து, இதில் தங்களது மகள் இருக்கிறாளா என கண்ணீர் விட்டு அழுதனர்.

அப்படி வந்தவர்களில், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம், மற்றும் யாதாத்ரி பகுதியை சேர்ந்த பெற்றோரின் மகள்கள் இருப்பது தெரியவந்தது. இந்த இரு பெற்றோரும் தங்களது மகள்களை கண்டதும் கதறி அழுது துடித்தனர். இதற்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம், மகாநதி திரைப்படத்தில், ஒரு விபச்சார வீட்டில் தனது மகளை கண்டு நடிகர் கமல்ஹாசன் கதறி அழுவதை நினைவுபடுத்துவது போல் இருந்தது. இந்த கும்பலுக்கு பின்னால் இருந்து குழந்தைகளை கடத்தும் கும்பலை விரைவில் கண்டுபிடிப்போம் என தெலங்கானா போலீஸ் டிஜிபி மஹேந்தர் ரெட்டி கூறியுள்ளார்.