மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.11,000 கோடி வங்கிக்கடன் திட்டம்: உடனே செயல்படுத்த அமைச்சர் உத்தரவு

0
0

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.11,000 கோடி வங்கிக்கடன் உள்ளிட்ட திட்டங்களை விரைவாக செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உத்தரவிட்டார்.

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில், துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது. இதில் தாய் திட்டம், பசுமை வீடுகள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி, தனிநபர் இல்ல கழிப்பறை கட்டுதல், ஊரக சாலைப் பணிகள், சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நடக்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.

அப்போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘‘ஊரக வளர்ச்சித் துறையில் பல்வேறு திட்டங்களுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, தற்போது நிலுவையில் உள்ள பணிகளை, தரமாகவும், வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டும் நிறைவேற்ற வேண்டும். நடப்பு நிதியாண்டில் மேற்கொள்ளப்படும் பணிகளையும் உரிய காலத்தில் முடிக்க விரைவாக செயலாற்ற வேண்டும். அம்மா இருசக்கர வாகன திட்டத்தின்கீழ் இதுவரை 19,230 மகளிருக்கு ரூ.47 கோடியே 92 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தை விரைவுபடுத்தி அதிக அளவில் மகளிருக்கு வாகனங்கள் வழங்க வேண்டும்’’ என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், துறையின் கீழ் 110- விதியில் முதல்வர், ரூ.1,200 கோடியில் 5,500 கிமீ நீளமுள்ள ஊரக சாலைகள் அமைத்தல், 1,200 கிராமங்களில் சவ்வூடு பரவுதல் நிலையங்கள் அமைத்தல், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.11,000 கோடி வங்கிக்கடன் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து அறிவித்ததை சுட்டிக்காட்டி இதற்கான திட்ட செயலாக்கத்தை விரைவுபடுத்தவும் அமைச்சர் உத்தரவிட்டார்.

கூட்டத்தில், துறை செயலர் ஹன்ஸ் ராஜ்வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் மீனாட்சி ராஜகோபால், இயக்குநர் கா.பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.