ப.சிதம்பரம் வீட்டில் நகை, பணம் கொள்ளை

0
0

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் மத்திய நிதி அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் வீடு சென்னையில் நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் தோட்ட சாலையில் உள்ளது. சிதம்பரத்தின் குடும்பத்தினர் சில தினங்களுக்கு முன்னர் வெளியூர் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மற்றும் தங்கம், வைரத்தால் ஆன நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இவை பழங்கால நகைகள் என தகவல் வெளியாகியுள்ளது. விலை உயர்ந்த பட்டுப் புடவைகளும் கொள்ளை போனதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையில் இறங்கினர்.

முதல் கட்டமாக அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் முகத்தை மறைத்தபடி யாரோ ஒருவர் அறைக்குள் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளன. எனவே, வீட்டில் பணியாளர்களாக வேலை செய்தவர்கள், வீட்டில் ஆட்கள் இல்லாததை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்களா? அல்லது வேறு வெளி நபர்கள் யாரேனும் கைவரிசை காட்டினார்களா? என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நகை, பணத்தை மீட்போம்” என்றனர். கொள்ளை போன நகைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையே, ப.சிதம்பரம் தரப்பினர் அளித்த புகாரை திரும்ப பெற்றதாக போலீஸார் தெரிவித்தனர்.