போலி வாக்காளர் அட்டை அச்சடிப்பு; கம்ப்யூட்டர் மைய உரிமையாளர் கைது: தமிழகம் முழுவதும் நீளும் நெட்வொர்க்; அதிர்ச்சியில் போலீஸ்

0
4

போலியாக வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சடித்தது தொடர்பாக ஏற்கெனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கோவையைச் சேர்ந்த கம்ப்யூட்டர் மைய உரிமையாளர் ஒருவரை நாகர்கோவில் போலீஸார் நேற்று கைது செய்தனர். இந்த முறைகேடு சங்கிலி தொடர்போல் தமிழகம் முழுவதும் நீள்வதால் போலீஸாரும், தேர்தல் அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நாகர்கோவில் கோட்டாறில், ஈத்தாமொழி சாலையில் உள்ள சுமித் ஸ்டூடியோவில், போலியாக வாக்காளர் அடையாள அட்டைகளை அச்சடித்து, விநியோகம் செய்வதாக தேர்தல் அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து, தேர்தல் அதிகாரிகள் மற்றும் கோட்டாறு போலீஸார் சுமித் ஸ்டூடியோவை சோதனையிட்டபோது, போலி வாக்காளர் அட்டைகள் அச்சடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு 800-க்கும் மேற்பட்ட போலி வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஸ்டூடியோ உரிமையாளர் செந்தில்குமார், ஊழியர் சுபாஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ரகசிய எண் கிடைத்தது எப்படி?

தேர்தல் கமிஷனின் இணையதளத்தில் இருந்து வாக்காளர் அட்டைகளை பதிவிறக்கம் செய்து, அவற்றில் பெயரை இணைத்து அடையாள அட்டை கொடுக்கும் வகையில் ரகசிய குறியீட்டு எண் எவ்வாறு கிடைத்தது என்பது தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. செந்தில்குமாரிடம் நடத்திய விசாரணையில், கோவையில் உளள கம்ப்யூட்டர் மைய உரிமையாளர் சதீஷ்குமார்(35) என்பவர் மூலம் வாக்காளர் அட்டைகளை அச்சடித்தது தெரியவந்தது.

போலிக்கு வாட்ஸ்அப் குழு

குமரி தனிப்படை போலீஸார், கோவை சென்று, அங்கு பாவலர் நகரில் சதீஷ்குமாரை கைது செய்து நாகர்கோவில் அழைத்து வந்தனர். விசாரணையில் அவர், தேர்தல் கமிஷன் இணையத்தில் இருந்து வாக்காளர் அடையாள அட்டைக்கான விவரங்களை பதிவிறக்கம் செய்வதற்கான ரகசிய குறியீடு எண்களை, ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவர் தனக்கு கொடுத்ததாக கூறினார். மேலும், வாக்காளர் அட்டைகளை போலியாக அச்சடிக்கும் ஸ்டூடியோக்கள், கம்ப்யூட்டர் மையங்களைக் கொண்ட வாட்ஸ்அப் குழு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இவர்கள் தமிழகத்தில் பரவலாக உள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.