போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சிக்கிய வி.சி.க பிரமுகர் உட்பட 10 பேருக்கு குண்டர் சட்டத்தில் சிறை- போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நடவடிக்கை

0
0

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சிக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வீரகுமார், அவரது தம்பி உட்பட 10 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

திருவல்லிக்கேணியில் உள்ள டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் போலி பாஸ்போர்ட் தயாரிக்கப்பட்டு வருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 25-ம் தேதி சம்பவ இடத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

ரூ.10 லட்சம் வரை கைமாறியது

அப்போது, அங்கு இலங்கைத் தமிழர்கள் உதவியுடன் தமிழ்நாட்டிலுள்ள பயனற்ற பாஸ்போர்ட்டுகளை ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விலை கொடுத்து வாங்கி அந்த பாஸ்போர்ட்டில் சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படத்துக்கு மாற்றாக தங்களுக்குத் தேவைப்படும் இலங்கைத் தமிழர்கள் அல்லது வேறு நபர்களின் புகைப்படங்களைப் பொருத்தி இந்திய பாஸ்போர்ட்டுகளின் பெயரில் இலங்கை தமிழர்கள் மற்றும் வேறு நபர்களை வெளி நாடுகளுக்கு அனுப்பி வைத்தது தெரியவந்தது. இதற்காக ரூ.7 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பணம் கை மாறி இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதுதொடர்பாக டிராவல்ஸ் உரிமையாளர் பெருங்குடி வீரகுமார் (47), அவரது தம்பி எழும்பூர் பாலு (45), கடையில் வேலை செய்யும் ஊழியர்கள் கார்த்திகேயன் (40), சரவணன் (43) கைது செய்யப்பட்டனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் இலங்கைத் தமிழர்களான பாலாஜி (40), குணாளன் (48), கிருஷ்ணமூர்த்தி (47) என 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 92 போலி பாஸ்போர்ட்டுகள், அதைத் தயாரிக்கத் தேவையான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களுக்கும் போலி பாஸ்போர்ட் கும்பலுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

10 ஆண்டுக்கும் மேலாக

அதன்படி, மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 11 பேரையும் 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில், இவர் களுக்கும் போலி பாஸ்போர்ட் கும்பலுக்கும் தொடர்பு இருப்பதும், வீரகுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போலி பாஸ்போர்ட் தயாரிக்கும் வேலையை செய்து வந்ததாகவும் போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக் கொண்டு டிராவல்ஸ் உரிமையாளர் வீரகுமார் அவரது தம்பி பாலு, கார்த்திகேயன், சரவணன், உமர் உசேன், அம்ஜத் குமார், சக்திவேலு, பாலாஜி (40), குணாளன் ஆகிய 9 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

இவர்கள் தவிர மற்றொரு போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சிக்கிய மயிலாப்பூரைச் சேர்ந்த தனபால் (56) என்பவரும் இதே பிரிவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விசிக வேட்பாளராக…

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள வீரகுமார் 2016-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மக்கள் நலக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வி யடைந்தவர். இவர் தலைமையிலான கும்பலைப் பிடிக்க நீண்ட நாட்கள் துப்பு துலக்கி நம்பத் தகுந்த தகவலின் பேரிலேயே திடீர் சோதனை நடத்தி கைது செய்திருந்தோம். இவர் தொழில் அதிபராகவும் வலம் வந்தார் என மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.