போராட்டம் நடத்தியவரை தாக்கியதாக நவாஸ் ஷெரீப் பேரன்கள் கைது

0
0

போராட்டம் நடத்தியவரைத் தாக்கியதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பேரன்கள் லண்டனில் கைது செய்யப்பட்டனர்.

நவாஸ் ஷெரீப் தற்போது தன் குடும்பத்தாருடன் பிரிட்டனிலுள்ள லண்டனில் வசித்து வருகிறார். இவர் மீதும் இவர் குடும்பத்தார் மீது ஊழல் வழக்குகள் இருப்ப

தால் லண்டனிலிருந்து பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலுள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஷெரீப் அவ்வப்போது ஆஜராகி வருகிறார். மேலும் லண்டனில் அவன்பீல்டு அடுக்குமாடி குடியிருப்பு முறைகேடு விவகாரத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்து வந்த பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் நவாஸ் ஷெரீப் மீதான குற்றம் உறுதியானதால் அவருக்கு 10 ஆண்டுகள் தண்டனையும், அவரது மகள் மரியம் நவாஸுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சிக்கு எதிராக நேற்று முன்தினம் லண்டனில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். லண்டனின் அவன்பீல்ட் பகுதியிலுள்ள ஷெரீப் வீட்டின் முன்பு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் தலைமையிலான தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது ஷெரீப்பின் மகள் வயிற்றுப் பேரன்களான ஜுனைத் சப்தார், ஜாகிரியா ஹுசைன் ஆகியோர் வீட்டுக்கு வெளியே வந்தனர். அவர்களை முற்றுகையிட்டு கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும், ஷெரீப் பேரன்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அப்போது தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தொண்டர் ஒருவரை பேரன்கள் ஜுனைத், ஜாகிரியா ஆகியோர் தாக்கியதாகத் தெரிகிறது. இதையடுத்து லண்டன் போலீஸார் அவர்கள் 2 பேரையும் கைது செய்துள்ளனர். சில மணிநேர விசாரணைக்கு பிறகு அவர்கள் இருவரையும் போலீஸார் விடுவித்தனர்.

இதுதொடர்பாக ஷெரீபின் மகளும், ஜுனைத்தின் தாயாருமான மரியம் நவாஸ் ட்விட்டரில் கூறியிருப்பதாவது:

கடந்த சிலநாட்களாக ஜுனைத்தை போராட்டக்காரர்கள் குறிவைத்து வருகின்றனர். அவன் வீட்டிலிருந்து வரும்போது அவன் மீது எச்சில் துப்புவது, குடையால் தாக்க முனைவது போன்ற காரியங்களில் ஈடுபட்டனர். இருவரையும் அசிங்கமாக பேசிவந்துள்ளனர் அந்த நிலைமையில் யாராக இருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள். இவ்வாறு மரியம் நவாஸ் கூறியுள்ளார்.