பேரன்பு திரைப்படத்தின் பாடல் வெளியீடு தேதி அறிவிப்பு! | Director Ram’s Peranbu audio release date announced!

0
0

சென்னை: இயக்குனர் ராமின் அடுத்த படைப்பான பேரன்பு திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஜூலை 15ஆம் தேதி நடைபெற உள்ளது.

தேசிய விருதுபெற்ற இயக்குனர் ராம், தரமணி திரைப்படத்திற்கு பிறகு எடுத்திருக்கும் திரைப்படம் பேரன்பு. தந்தை மகள் உறவைப் போற்றும் விதமாக வெளிவந்து பெரிதும் பேசப்பட்ட அவரின் தங்கமீன்கள் படத்தைப் போலவே, இந்தப்படத்திலும் தந்தை-மகள் உறவை மையமாக வைத்து புதிய கோணத்தில் கதையமைத்துள்ளார்.

மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, அஞ்சலி, ராமின் செல்லப்பிள்ளையான தங்கமீன்கள் படத்தின் செல்லம்மா கதாப்பாத்திரத்திற்கு உயிரூட்டிய சாதனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குனர் சமுத்திரக்கனியும் நடித்துள்ளார்.

ராமின் ஆல் டைம் ஃபேவரிட் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசைமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சூர்ய ப்ரதாமன் படத்தொகுப்பு செய்துள்ளார். தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தை ஸ்ரீ ராஜலக்‌ஷ்மி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

நெதர்லாந்தில் இந்த ஆண்டு நடைபெற்ற 47வது சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை குவித்ததோடு, ரசிகர்களின் ஆதரவைப்பெற்று பங்கேற்ற 187 படங்களில் 20வது இடத்தையும் பெற்றது. அதேபோல் சீனாவில் நடைபெற்ற ஷங்காய் சர்வதேச சினிமா விழாவிலும் கவனத்தை ஈர்த்தது.

இந்த நிலையில், வைரமுத்து எழுதி, யுவன் மெட்டமைத்திருக்கும் இத்திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா ஜூலை 15 ஆம் தேதி, மாலை 6 மணிக்கு சென்னை வாலஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இயக்குனர் ராம் ட்விட்டரில் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

வெளியாகப்போவது ஆனந்த யாழா? பேரன்பின் அற்புத யாழா? என ராம் யுவன் கூட்டணியில் லயிக்கும் ரசிகர்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

பேரன்பு