பெர்னாண்டினியோவின் செல்ஃப் கோல்; பிரேசில் வெளியேற்றத்தினால் நொறுங்கிய இதயங்கள்: அரையிறுதியில் பெல்ஜியம்

0
0

உலகக்கோப்பை 2018 கால்பந்து அரையிறுதிக்கு பெல்ஜியம் அணி நுழைந்து வரலாறு படைத்துள்ளது. உலகப்புகழ் பெற்ற அந்த மஞ்சள் சீருடை கடைசியில் தாழ்வானது, சிகப்புச் சீருடை மேலோங்கி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மீண்டும் ஒரு தேசத்தின் அழுகையைப் பார்க்க முடிந்தது, கடந்த முறை ஜெர்மனியிடம் வாங்கிய பேருதை போல் அல்ல இது, மாறாக கோல் அடிக்க பல வாய்ப்புகள் கிடைத்தது, அவையெல்லாம் பிரேசில் மட்டுமே கோல் அடிக்கக் கூடிய வாய்ப்புகள் ஆனால் இம்முறை அவையெல்லாம் கோலாகவில்லை. மிகவும் நுணுக்கமான, நுட்பமான கால்பந்தாட்டத்தை பிரேசில் ஆடினாலும் பெல்ஜியத்தின் மரபும் நவீனமும் கலந்த கால்பந்தாட்டம் கடைசியில் வென்றது.

வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டே இருந்த அணி (பிரேசில்) தோற்று, வாய்ப்புகளுக்காகத் தேடி அலைந்த அணி (பெல்ஜியம்) வெற்றி பெற்றது, சில வேளைகளில் ஆசைகளும் எதிர்பார்ப்புகளுமே பெரும்தடையாகப் போய் முடியும். பிரேசில் பயிற்சியாளர் டிட்டே ஆஃப் டைமின் போது 4-4-2 என்று பிரேசிலின் வியூகத்தை மாற்றினார். வில்லியானுக்குப் பதிலாக ராபர்ட் பெர்மினோவைக் கொண்டுவந்தார், கேப்ரியல் ஜீஸசை வலது பக்கத்துக்கு மாற்றினார். இது பலன் கொடுத்தது. பெல்ஜியத்துக்கு பெரிய குடைச்சலைக் கொடுத்தது. ஆனாலும் ஏற்கெனவே 2-0 என்று பெல்ஜியம் முன்னிலை வகித்த பிறகே கடினமான பணியாகவே எப்போதும் அமையும்.

இந்த ஆட்டத்தின் தன்மையை பிரேசில் பயிற்சியாளர் டிட்டே ரத்தினச்சுருக்கமாக இவ்வாறு கூறினார்:

“மிகவும் பிரமாதமான கால்பந்தாட்டம், இரு அணிகளும் பிரமிக்கத்தக்க உத்திகளைக் கொண்டு ஆடியது. இப்போது வலியுடனும், கசப்புடனும் நான் இருந்தாலும் ஒன்றைக் கூற விரும்புகிறேன், கால்பந்தாட்டத்தை விரும்புகிறீர்களா? இந்த ஆட்டத்தைத்தான் பார்க்க வேண்டும். உணர்ச்சிபூர்வமாக நாம் இதில் ஈடுபடாமல் பார்த்தோமானால் இன்றைய பிரேசில்-பெல்ஜியம் ஆட்டம் மிகச்சிறந்த ஆட்டம். முக்கோண பாஸ்கள். இடவல வல இட மாற்றங்கள், தடுப்பாட்டங்கள், கோல் தடுப்புகள், ஆஹா! என்ன ஒரு அழகான ஆட்டம்!”

ஆம். இப்படித்தான் இருந்தது இந்த ஆட்டம்!

ஸ்பாட் கிக் வாய்ப்பு மறுப்பு:

91வது நிமிடத்தில் டக்ளஸ் கோஸ்டாவின் கிராசுக்கு நெய்மரும் மியூனியரும் போட்டிப் போட்டனர், இதில் மியூனியர் நெய்மரை லேசாகத் தள்ளியது போல் தெரிந்தது, நெய்மர் கீழே விழுந்தார், நிச்சயம் பெனால்டி கொடுக்கப்பட வேண்டியதுதான், மிகவும் லேசாகத்தான் தள்ளியது போல் தெரிந்தது, ஆனாலும் பெனால்டி பகுதியில் நெய்மரின் கண்ணை மறைக்கும் மியூனியரின் செயல் பெனால்டி கிக் அளிக்கப்பட வேண்டியதுதான், ஆனால் நடுவர் கொடுக்கவில்லை. வீடியோ ரெஃபரல் சென்றனர், அதில் பெனால்டி கொடுக்க வேண்டியதல்ல என்று முடிவெடுக்கப்பட்டது.

தோற்ற பிறகு உணர்ச்சிகரம். | ஏ.எப்.பி.

 

94வது நிமிடத்தில் டக்ளஸ் கோஸ்டா வலது புறத்திலிருந்து வெட்டி உள்ளே கொண்டு வந்து நெய்மருக்கு கிராஸ் செய்ய நெய்மர் கோலின் வலது மூலையைக் குறிவைத்து அடித்த ஷாட்டை கோல் கீப்பர் கோர்ட்வா முழுதும் எம்பி விரல் நுனியால் தட்டி விட்டார், இது கார்னர் வாய்ப்பைப் பெற்றுத் தந்தாலும் அது ஒன்றுமில்லாமல் போனது, ஆனால் கோர்ட்வாவின் அந்த தடுப்பு பேசப்படும்.

செல்ஃப் கோலும் பெல்ஜிய எதிர்த்தாக்குதல் கோலும், பிரேசிலின் அச்சுறுத்தல் கோலும்:

ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் மைதானத்தின் நட்டநடுவிலிருந்து பெல்ஜியம் வீரர் டி புருய்ன் பந்தை மிக அருமையாக ஃபெலானிக்குக் கொடுக்க டி-சர்க்கிளுக்கு வெளியே அவரால் சரியாக பந்தை கையாள முடியவில்லை. இருந்தாலும் அவர் ஷாட் கோலுக்கு வைடாகச் சென்றது. இதனால் ஒரு கார்னர் விளைந்தது.

 

பிரேசில் அடித்த செல்ஃப் கோல் தருணம், பெர்னாண்டினியோ, கேப்ரியல் ஜீஸஸ் இருவரும் எம்புகின்றனர். | ஏ.எப்.பி.

 

ஹசார்ட் கார்னர் ஷாட் பிரேசில் கோலுக்கு அருகில் தூக்கி விடப்பட அருகில் எந்த ஒரு பெல்ஜியம் வீரரோ, சிகப்புச் சட்டையோ கண்ணுக்குத் தெரியவில்லை. வந்த கார்னர் ஷாட்டிற்கு கேப்ரியல் ஜீஸஸ், பெர்னாண்டினியோ இருவரும் எம்பினர் பெர்னாண்டினியோ தலையால் முட்டித் தள்ள நினைத்தார் ஆனால் அது அவரது தோளில் பட்டு கோல் வலைக்குள் சென்றது. அருகில் ஒரு பெல்ஜியம் வீரர் கூட இல்லாத போது எதற்காக இப்படி ஒரு ஷாட்டை அவர் முயற்சி செய்ய வேண்டும் என்பது புரியாத புதிர். பிரேசிலின் செல்ஃப் கோலில் பெல்ஜியம் 1-0 என்று முன்னிலை பெற்றது.

30வது நிமிடத்தில் வில்லியான் ஷாட் ஒன்று பெர்னாண்டினியோவுக்கு வர அவர் பாக்ஸின் ஓரத்திலிருந்து கோல் அடிக்கு நிலையில் இருந்தார், ஆனால் பந்தை அடிக்கும் போது கால் தவறினார். விட்செல் பந்தைத் தடுத்தார். நெய்மர் தாக்குதலை மீட்டெடுக்கும் முயற்சியில் பிரேசிலுக்குக் கார்னர் வாய்ப்பு கிடைத்தது. நெய்மரின் கார்னரை எளிதாக ஃபெலானி கிளியர் செய்தார்.

பந்து பெல்ஜியம் காலுக்கு மாற நம்ப முடியாத எதிர்த்தாக்குதலை நிகழ்த்தினார் பெல்ஜியத்தின் தாடி வைத்த ஹீரோ லுகாகு, அவரைத் தடுக்க 3-4 பிரேசில் வீரர்கள் செய்த முயற்சி வீணானது, கிட்டத்தட்ட நடுமைதானத்திலிருந்து பிரேசில் வீரர்கள் பாலினியோ, பெர்னாண்டினியோ ஆகியோரின் தீவிர இடைமறிப்பு முயற்சிகளை அபாரத்திறமையுடன் கடைந்து, கடந்து பந்தை பிரேசில் எல்லைக்குக் கொண்டு வந்தார். இது ஒரு அபாரமான ஓட்டம், பந்துடன் பிரேசில் வீரர்களின் சவாலான இடைமறிப்புகளை அதைவிடவும் திறமையாக முறியடித்து பந்தை டி புருய்னுக்க்கு வலது புறம் உதைக்க அவர் மிகப்பிரமாதமாக வலது காலால் மிக ஸ்டைலிஷாக ஒரு மரண உதை உதைத்தார், பந்து கதறிக்கொண்டு கோலுக்குள் சென்றது. லுகாகுவின் அபாரமான திறமையினாலும் டி புருயினின் மரண உதையினாலும் பெல்ஜியம் 2-0 முன்னிலை வகித்தது. டிட்டேயின் பயிற்சியில் முதல் முறையாக 2 கோல்களை வாங்கியது பிரேசில்

லுகாகு கொடுத்த பந்தை கோலுக்கு எடுத்து செல்லும் டிபுருயின். | ஏ.எப்.பி.

 

ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் பாலினியோவுக்குப் பதிலாக ரெனாட்டோ அகஸ்டோ உள்ளே வந்தார். அப்போது நெய்மர் அடித்த ஷாட்டை கோர்ட்வா தடுத்தார், பிறகு பந்து கூட்டினியோவிடம் வர இடது உள்புறம் விறுவிறுவென பந்தை எடுத்து வந்தார். அங்கு பதிலி வீரர் ரெனாட்டோ அகஸ்டோ தனியாக இருப்பதைக் கண்டார். உடனடியாக கவித்துவமான ஒரு பாஸில் மிக துல்லியமாக பந்தை அவருக்கு வாகாக தூக்கி விட்டார், அகஸ்டோ ஒன்றும் செய்ய வேண்டியதில்லை பந்து வரும் திசையில் அது போய்க்கொண்டிருக்கும் திசைநோக்கி தலையால் தள்ள வேண்டும் அவ்வளவே, அதைத்தான் செய்தார் அகஸ்டோ பிரேசில் 1-2.

பிரேசிலும் வாய்ப்புகளை நிறைய தவற விட்டது. ஆட்டத்தின் ஆரம்பக் கட்டத்தில் கிடைத்த கார்னர் வாய்ப்பை எளிதில் கோலாக மாற்ற வேண்டிய தியாகோ சில்வா கோல் போஸ்ட்டில் அடித்தார், இது உறுதியான கோல் வாய்ப்பு. அதே போல் பாலினியோ கோல் அடிக்கும் நல்ல நிலையிலிருந்து கோல் வாய்ப்பை நழுவ விட்டார்.

டிட்டேயின் பயிற்சியின் கீழ் பிரேசில் 25 ஆட்டங்களில் 20-ஐ வென்றுள்ளது. ஆட்டம் ஒன்றுக்கு சராசரியாக 2 கோல்களுக்கும் மேல் பிரேசில் போட்டுள்ளது. பெல்ஜியம்தான் தங்களைத் தக்கவைக்க ஆட வேண்டும், ஆனால் மாறாக பெல்ஜியம் அணியும் பிரேசிலின் வியூகத்தைக் கடந்து வந்து ஊடுருவியது.

மார்செலோ, கூட்டினியோ, நெய்மர் எப்போதுமே இடது புறம் பல சாகசங்களை நிகழ்த்தி வந்தனர். இதற்குத் தக்கவாறு பெல்ஜியத்தின் வலது பக்கம் வலுவாக இருந்தது, அங்கு மியூனியர், ஃபெலானி, லுகாகு ஆகியோர் பிரேசில் மும்மூர்த்திகள் அளவுக்குச் சாகசம் செய்ய முடியாவிட்டாலும், எதிர்த்தாக்குதல் விஷயத்தில் பிரேசிலைப் பதம் பார்த்தனர்.

நெய்மர் ஆட்டத்தில் கவனம் செலுத்தும் போது மிகப்பிரமாதமான வீரர் ஒவ்வொருமுறையும் பந்தை இவர் எடுத்து சென்று பெல்ஜியம் பகுதிக்குள் ஊடுருவி பாஸ் செய்யும் போதும் அங்கு ஒன்று ஆளில்லாமல் இருந்தது, அல்லது ஷாட் மிஸ் ஆனது, அல்லது பந்து மிஸ் ஆனது. இவையெல்லாம் பிரேசில் சாதாரணமாக கோல்களாக மாற்றும் நகர்வுகளே. ஆனால் நேற்று தகையவில்லை.

இடைவேளக்குப் பிறகு நெய்மர் மிகப்பிரமாதமாக ஆடினார், பெரிய அச்ச்றுத்தலை மேற்கொண்டார், மைதானத்தின் இடப்பக்கத்திலிருந்து நடுவுக்கும் நடுவிலிருந்து வலப்பக்கத்திற்கும் மாறி மாறி அவர் பந்தை அனுப்புவதும் பெறுவதும், மீண்டும் கோலுக்காக அனுப்புவதுமாக மிகவும் செயல்பூர்வமாகத் திகழ்ந்தார், ஆனால் அவர் ஆடிய ஷாட்களை, கொடுத்த பாஸ்களை கோலாக மாற்ற அங்கு ரிவால்டோவோ, ரொனால்டோவோ, ரொனால்டினியோவோ இல்லையே!

பிரேசிலின் இந்த ஆட்டத்துக்கு பெல்ஜியம் கோல் கீப்பர் கோர்ட்டுவா மட்டும் இல்லையெனில் பிரேசில் வென்றிருக்கும். நெய்மரின் கடைசி வளைந்த ஷாட் முயற்சி கோலுக்குள் சென்று விடும் என்று ஒரு கையை நெஞ்சில் பிடித்தபடி பிரேசில் ரசிகர்கள் ஆவலுடன் பார்த்து கொண்டிருக்க கோர்ட்டுவா அதனை எம்பி விரல்களால் தட்டி விட பிரேசில் ரசிகர்களின் இருதயங்கள் நொறுங்கின.

இதே மைதானத்தில் (கஸான்), ஜெர்மனி, அர்ஜெண்டினா தோற்று வெளியேறியது, பிரேசில் நேற்று வெளியேறியது. பெரிய பெரிய அணிகளை குழிதோண்டிப் புதைக்கும் இடுகாடோ இந்த மைதானம்?

அரையிறுதியில் பிரான்ஸ் அணியை பெல்ஜியம் சந்திக்கிறது, முன்னதாக இன்னொரு லத்தீன் அமெரிக்க அணியான உருகுவேவை 2-0 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.