பெனால்டி ஷூட் அவுட்டில் 4-3 என்ற கணக்கில் வெற்றி; ரஷ்யாவின் கனவை கலைத்த குரோஷியா- அரை இறுதியில் 11-ம் தேதி இங்கிலாந்துடன் மோதல்

0
0

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ரஷ்யாவுக்கு எதிரான கால் இறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் இரவு சோச்சியில் உள்ள ஒலிம்பிக் பிஷ்ட் மைதானத்தில் நடைபெற்ற கடைசி கால் இறுதி ஆட்டத்தில் குரோஷியா – ரஷ்யா அணிகள் மோதின.25-வது நிமிடத்தில் ரஷ்ய அணி முதல் கோலை அடித்தது. ஆர்டெம் ஸூபாவுக்கு பந்தை தட்டிவிட்டு டெனிஸ் செரிஷேவ் சற்று முன்னோக்கி நோக்கி நகர மீண்டும் அவருக்கு பந்தை வெட்டி அனுப்பினார் ஸூபா. அதனை குரோஷியா வீரர்களான லூகா மோட்ரிக், டோமோகோஜ் விடா ஆகியோரது இடைமறிப்புகளை தாண்டி எடுத்துச் சென்ற செரி ஷேவ் 75 அடி தூரத்தில் இருந்து இரு டிபன்டர்களின் ஊடாக வலுவாக அடித்த ஷாட் கோல்கம்பத்தின் மேல் இடது ஓரமாக கோல் வலையை துளைத்தது. இந்த கோலால் ரஷ்யா 1-0 என முன்னிலை பெற்றது.

அடுத்த 8-வது நிமிடத்தில் குரோஷியா பதிலடி கொடுத்தது. பாக்ஸின் வலது ஓரத்தை நோக்கி பந்தை கடத்திச் சென்ற மரியோ மன்ட்சூசிக், பின்னர் பாக்ஸின் மையப்பகுதியில் மார்க் செய்யப்படாத நிலையில் இருந்த ஆண்ட்ரேஜ் கிரமரிக்குக்கு தட்டி விட்டார். அவர், சர்வசாதாரண மாக அதனை தலையால் முட்டி கோல் அடிக்க ஆட்டம் 1-1 என சமநிலையை அடைந்தது. இதன் பின்னர் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை. நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களிலும் காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 6 நிமிடங்களிலும் மேற்கொண்டு கோல்கள் அடிக்கப்படவில்லை. இதனால் ஆட்டம் 1-1 என சமநிலையிலேயே இருந்தது. இதனால் வெற்றியை தீர்மானிக்க கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது.

இதில் 101-வது நிமிடத்தில் லூக்கா மோட்ரிக் கார்னரில் இருந்து அடித்த ஷாட்டை, பாக்ஸின் மையப்பகுதியில் நின்ற டோமோகோஜ் விடா தலையால் முட்டி கோலாக மாற்றினார். இதனால் குரோஷியா 2-1 என முன்னிலை பெற்றது.

அடுத்த 4-வது நிமிடத்தில் ரஷ்யா பதிலடி கொடுத்தது. ஃப்ரீகிக்கில் ஸகோவ் அடித்த ஷாட்டை, மரியோ பெர்னாண்டஸ் தலையால் முட்டி கோலடிக்க ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையை அடைந்தது.இதைத் தொடர்ந்து வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முத லில் ரஷ்யாவின் ஸ்மோ லோவ் அடித்த ஷாட்டை கோல்கம்பத் தின் இடது ஓரத்தில் கோல்கீப்பர் டேனியல் சுபாசிச் தடுத்தார். அதேவேளையில் குரோஷியா தரப்பில் மார்சலோ ப்ரோஸோவிச் அடித்த ஷாட் கோலாக மாறியது. 2-வது வாய்ப்பில் ரஷ்யாவின் ஆலன் ஸகோவ் கோல் அடிக்க, குரோஷியாவின் மேடியோ கோவாசிச் வீணடித்தார்.

இதனால் ஆட்டம் 1-1 என்ற நிலையை எட்டியது. 3-வது வாய்ப்பில் ரஷ்யாவின் மரியோ பெர்னாண்டஸ் அடித்த பந்து கோல்கம்பத்துக்கு இடதுபுறம் விலகிச் சென்றது. அதேவேளையில் லூக்கா மோட்ரிக் தனது வாய்ப்பை கோலாக மாற்ற குரோஷியா 2-1 என முன்னிலை பெற்றது. 4-வது வாய்ப்பில் ரஷ்யா தரப்பில் செர்ஜி இக்னாஷேவிச்சும், குரோஷியா தரப்பில் டோமகோஜ் விடாவும் கோல் அடித்தனர். அப்போது குரோஷியா 3-2 என்ற முன்னிலையை அடைந்திருந்தது. கடைசி வாய்ப்பில் முதலில் ரஷ்யாவின் தலேர் குஷியேவ் கோல் அடிக்க 3-3 என்ற சமநிலையை எட்டியது. இதைத் தொடர்ந்து இவான் ராகிட்டிக் அடித்த ஷாட் கோல்கம்பத்தின் இடது ஓரத்தை துளைக்க குரோஷியா அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. இதனால் ரஷ்யாவின் அரை இறுதி கனவு கலைந்தது. வரும் 11-ம் தேதி நடைபெறும் அரை இறுதியில் இங்கிலாந்து அணி யை சந்திக்கிறது குரோஷியா.

20 ஆண்டுகளுக்கு பிறகு

குரோஷியா அணி அரை இறுதிக்கு முன்னேறுவது இது 2-வது முறையாகும். கடைசியாக அந்த அணி 1998-ம் ஆண்டு அரை இறுதிக்கு முன்னேறியிருந்தது. 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் அரை இறுதியில் கால்பதித்துள்ளது. ஒரே உலகக் கோப்பை தொடரில் இரு முறை பெனால்டி ஷூட்டில் வெற்றி பெற்ற 2-வது அணி குரோஷியா ஆகும். டென்மார்க் அணிக்கு எதிரான நாக் அவுட் சுற்றிலும் குரோஷியா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் தான் வெற்றி பெற்றிருந்தது. இதற்கு முன்னர் 1990-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணி இரு ஆட்டங்களில் பெனால்டி ஷூட் அவுட்டில் வெற்றி கண்டிருந்தது.