புதுச்சேரியில் வரும் 18, 19-ல் இளைஞர் காங்கிரஸ் தேர்தல்: தனித்தனி வேட்பாளர்களை ஆதரிக்கும் முதல்வர், மாநிலத் தலைவர்

0
0

புதுச்சேரியில் வரும் 18, 19-ல் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடப்பது உறுதியாகியுள்ளது. இத்தேர்தலை தள்ளி வைக்கும் கோரி்க்கையை மேலிடம் ஏற்கவில்லை. மேலும் தலைவர் பதவிக்கு போட்டியிடுவோரில் தனித்தனி வேட்பாளர்களை முதல்வர், மாநிலத்தலைவர் ஆதரிப்பதால் ஒருமித்த கருத்து ஏற்படாத சூழல் நிலவுவதுடன் கடும் போட்டி நிலவுகிறது.

இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 2-ம் தேதி நிறைவடைந்தது. இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட 13 பேருக்கு அனுமதி தரப்பட்டது. இறுதியாக ஜெய்தீபன், ஜெய்னா, காளிமுத்து, ரமேஷ், ரகுபதி, லட்சுமி காந்தன், கார்த்திக், அசோக்ராஜ் உட்பட 9 பேர் போட்டியிடுகின்றனர்.

அதேபோல் 11 பொதுச்செயலர் பதவிகளுக்கான இடத்தில் 27 பேர் போட்டியிடுகின்றனர். இதில் அமைச்சர் கந்தசாமியின் மகன் விக்னேஷ், காங்கிரஸ் தனவேலு மகன் அசோக் ஷிண்டே உள்ளிட்டோரும் போட்டியிடுகின்றனர்.

தலைவர் பதவிக்கு போட்டியிடுவோரில் அதிக வாக்குகள் பெறுபவர் தலைவராவார். அடுத்தடுத்து வாக்குகள் பெறுவோர் எண்ணிக்கை அடிப்படையில் 4 பேர் துணைத்தலைவர்களாக அறிவிக்கப்படுவார்கள்.

இத்தேர்தல் 11, 12-ம் தேதிகளில் நடப்பதாக இருந்தது. திமுக தலைவர் கருணாநிதி மறைவால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. தலைவர் பதவிக்கு போட்டியிடுவோரில் முதல்வர் நாராயணசாமி வேட்பாளர் லட்சுமி காந்தனையும், மாநிலத் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் மற்றொரு வேட்பாளரான ரமேஷை ஆதரிப்பதால் ஒருமித்த கருத்து ஏற்படாத சூழல் நிலவுகிறது.

இதுதொடர்பாக காங்கிரஸ் நிர்வாகிகள் தரப்பில் கேட்டதற்கு, “மாநில காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ஒருமித்து ஒருவரை ஆதரிக்க முதல்வர், மாநிலத் தலைவர் தரப்பில் பேசினோம். ஆனால் சுமுக முடிவு எடுக்கப்படவில்லை. இதனால் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தலை நடத்த மேலிடத்துக்கு வலியுறுத்த முடிவு எடுக்கப்பட்டு கடிதமும் அனுப்பப்பட்டது. ஆனால், மேலிடம் இக்கருத்தை ஏற்கவில்லை. தேர்தல் வரும் 18, 19-ம் தேதிகளில் நடக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியப் பொறுப்பில் உள்ள முதல்வரும், மாநிலத் தலைவரும் தனித்தனி வேட்பாளர்களை ஆதரிப்பதால் கட்சியில் உள்ள நிர்வாகிகளும் இரு பிரிவுகளாக இருக்கும் சூழல் உருவாகியுள்ளது” என்று தெரிவித்தனர்.